என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
திருச்சியில் குடும்ப தொழிலாக மாறி வரும் கஞ்சா விற்பனை: காக்கிகளை திணறடிக்கும் ஏஜெண்டுகள்
- ஒரு கிலோவுக்கு கீழாக கஞ்சா வைத்திருப்பவர்கள் உடனடி ஜாமீனில் தப்பிக்க சட்டம் வழிவகை செயதுள்ளது.
- கஞ்சா மற்றும் போதை மாத்திரை விற்பனையை தடுக்க மேலும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருச்சி:
மது குடிக்கும் பழக்கத்தால் ஒருபுறம் இளைய தலைமுறை தள்ளாடி கொண்டிருக்க கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளால் மாணவர் சமூகம் சீரழிந்து கொண்டிருக்கிறது.
முன்பெல்லாம் திருச்சி மாநகரில் தினமும் ஓரிரு கஞ்சா வழக்குகள் மட்டுமே பதியப்பட்டு வந்தன. ஆனால் சமீப காலமாக கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விற்கும் கும்பல் அதிகம் பிடிபடுகிறது.
ஆனால் சட்டத்தில் இருக்கும் ஓட்டைகளை பயன்படுத்தி கஞ்சா விற்பனை செய்யும் புள்ளிகள் எளிதில் தப்பி விடுகிறார்கள்.
சமீபத்தில் திருச்சி மாநகரில் கஞ்சா வழக்கில் திருச்சி ராம்ஜி நகர் புது காலனி பகுதியைச் சேர்ந்த முழுமதி என்ற 60 வயது மூதாட்டி பிடிபட்டார். அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது. இதேபோன்று 110 கிராம் கஞ்சாவுடன் சுசிலா என்ற 43 வயது பெண்மணியும் போலீஸ் பிடியில் சிக்கினார்.
இருவரும் குறைந்த அளவு கஞ்சா வைத்திருந்ததாக உடனடி ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
பொன்மலைப்பட்டி கீழ உடையார் தெருவை சேர்ந்த பிராங்கிளின் ஜோசப் 28 என்ற இளைஞர் ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவுடன் சிக்கினார். அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
இவ்வாறு கஞ்சா விற்பனையில் பிடிபடும் நபர்களில் வெகு சிலரே ஜெயிலுக்கு செல்கிறார்கள். ஒரு கிலோவுக்கு கீழாக கஞ்சா வைத்திருப்பவர்கள் உடனடி ஜாமீனில் தப்பிக்க சட்டம் வழிவகை செயதுள்ளது. . இதனால் அவர்கள் மறுபடியும் களத்துக்கு வந்து விடுகிறார்கள்.
இவ்வாறு கஞ்சா விற்பனையில் பிடிபடும் பெரும்பாலானவர்கள் திருச்சி ராம்ஜி நகர் பகுதியை மையமாக கொண்டு வசிப்பவர்களாக இருக்கின்றனர்.
திருச்சி மாநகரில் பல இடங்களில் கணவன் மனைவி, குழந்தை குட்டிகள் என குடும்ப தொழிலாக, கூட்டுத் தொழிலாக செய்கின்றனர். இந்த கஞ்சா மற்றும் போதை பொருள் விற்பனையில் கல்லூரி மாணவர்களும் ஈடுபடுத்தப்படுகிறார்கள.
செல்போனுக்கு குறுந்தகவல் அனுப்பினால் வாடிக்கையாளரை தேடிச் சென்று கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை சப்ளை செய்யப்படுகிறது. இதற்கு போலீசார் கடிவாளம் போட்டுவிட்டதால் கஞ்சா விற்பனை ஏஜெண்டுகள் புதிய யுக்திகளை கையாள தொடங்கியுள்ளனர்.
காந்தி மார்க்கெட் போன்ற தொழிலாளர்கள் அதிகம் இருக்கும் பகுதிகளில் சாதாரண இட்லி கடைகள், தள்ளுவண்டியில் பழம்விற்கும் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் என பலருக்கும் கஞ்சா பொட்டலங்கள் சப்ளை செய்து அவர்கள் மூலமாக விற்பனை ஜோராக நடத்தும் திடுக்கிடும் தகவல்களும் வெளியாகி உள்ளன.
திருச்சி மாநகரில் கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூலை வரை 118 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 136 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் வசம் இருந்து 51.9 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. மேலும் 3 இருசக்கர வாகனங்கள், 4 நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த கஞ்சா வேட்டை தொடர்பாக திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சத்ய பிரியாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது;-
திருச்சி மாநகருக்கு பெங்களூர் உள்ளிட்ட சில பகுதிகளில் இருந்து கஞ்சா கடத்தி வரப்படுகிறது. பஸ்கள் மற்றும் கார்களில் கடத்தி வருகின்றனர்.
கஞ்சா விற்பனையை தடுப்பதற்காக 32 இடங்களை ஹாட் ஸ்பாட் ஆக அடையாளம் கண்டு 24 மணி நேரமும் ரோந்து போலீசார், ஹைவே பேட்ரோல் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் திருச்சி மாநகரில் இருக்கும் 200-க்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரிகளில் போதைப் பொருள் விழிப்புணர்வு கிளப்புகள் தொடங்கப்பட்டு அதன் மூலம் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
நடப்பாண்டில் மட்டும் 755 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. மேலும் கஞ்சா விற்பனையில் தொடர்ந்து ஈடுபடும் 29 பேருக்கு சரித்திர பதிவேடு திறக்கப்பட்டு அவர்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். 4 பேர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.
இந்த ஆன்ட்டி டிரக்ஸ் கிளப்புகளில் காவல்துறை அதிகாரிகள், மருத்துவர்கள், போதை மீட்புமைய பணியாளர்கள், மனநல மருத்துவர்கள் இடம்பெற்றுள்ளார்கள். இதில் அந்தப் பழக்கத்துக்கு அடிமையாகி இருப்பவர்கள் மீட்கப்படுகிறார்கள். தொடக்க நிலையில் இருப்பவர்கள் அடிமை ஆவதற்கு முன்பாக அந்த மாய வலையில் இருந்து மீட்கப்படுகிறார்கள்.
மாநகரப் பொருத்தமட்டில் குடிசை பகுதிகள் மற்றும் காந்தி மார்க்கெட் பகுதிகளில் அதிகம் கஞ்சா விற்பனை நடைபெறுகிறது. கஞ்சா கிடைக்காத பட்சத்தில் ஒரு சில இளைஞர்கள் போதை ஊசி செலுத்தும் வழக்கத்தையும் ஏற்படுத்தியிருக்கிறார்கள்.
இது மிகவும் அபாயகரமானது. இதனை விற்பனை செய்யும் நபர்கள் மருந்து கடைகளுக்கு சென்று வலி மாத்திரைகளை வாங்கி அதை பொடியாக்கி வேறு சில போதை வஸ்துக்களை கலந்து ஊசியாக விற்பனை செய்கிறார்கள்.
இதனை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற சட்டம் ஒழுங்கு ஆய்வு கூட்டத்தில் மருந்து கடை விற்பனையாளர்கள் தரப்பிலும் சிலரை பங்கேற்க வைத்தோம். மருத்துவர்களின் குறிப்பு இல்லாமல் போதை அளிக்கும் மருந்துகளை மாத்திரைகளை விற்பனை செய்தால் உரிமத்தை ரத்து செய்வோம் என எச்சரிக்கை விடுத்துள்ளோம்.
மேலும் கஞ்சா விற்பனையில் அதிகம் ஈடுபடும் பகுதியில் மறுவாழ்வு திட்டங்கள் செயல்படுத்த மாநில அரசுக்கு பரிந்துரை செய்யவும் கலெக்டர் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார். கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் பெரும்பாலும் மதுவுடன் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களையே அதிகம் பயன்படுத்துகிறார்கள்.
இதன் மூலம் நிதானம் இழந்து என்ன செய்கிறோம் என்று தெரியாமல் பல கொடூரங்களை அரங்கேற்றுகிறார்கள். ஆகவே கஞ்சா மற்றும் போதை மாத்திரை விற்பனையை தடுக்க மேலும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்