search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    லாரி டேங்கரில் இருந்து கியாஸ் கசிந்து வெளியேறியதால் பரபரப்பு- வாகன ஓட்டிகள் அலறியடித்து ஓட்டம்
    X

    லாரி டேங்கரில் இருந்து கியாஸ் கசிந்து வெளியேறியதால் பரபரப்பு- வாகன ஓட்டிகள் அலறியடித்து ஓட்டம்

    • சுமார் 20 அடி உயரத்திற்கு மேல் பயங்கர இரைச்சல் சத்தத்துடன் கியாஸ் வெளியேறத் தொடங்கியது.
    • கியாஸ் தீப்பற்றாததால் பெரிய அளவில் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

    பொன்னேரி:

    மீஞ்சூரை அடுத்த கொண்டக்கரையில் தனியார் கியாஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் இருந்து பைப் மூலம் கியாஸ் கொண்டுவரப்பட்டு சேமிக்கப்பட்டு பின்னர் அங்கிருந்து லாரிகள் மூலம் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நேற்று இரவு டேங்கரில் கியாஸ் நிரப்பிய லாரி ஒன்று மீஞ்சூர்-மணலி நெடுஞ்சாலையில் வெள்ளிவாயில் சாவடி அருகே சென்று கொண்டு இருந்தது. அப்போது லாரியில் உள்ள டேங்கரில்இருந்து திடீரென கியாஸ் கசிந்து வெளியேறத் தொடங்கியது.

    சுமார் 20 அடி உயரத்திற்கு மேல் பயங்கர இரைச்சல் சத்தத்துடன் கியாஸ் வெளியேறத் தொடங்கியது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் லாரியை சாலையின் நடுவிலேயே நிறுத்திவிட்டு இறங்கினார். இதனால் பின்னால் வந்த வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கின.

    மேலும் வாகனங்கள் திரும்பி செல்ல முடியாததால் அதில் இருந்தவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் செங்குன்றம் போக்குவரத்து ஆய்வாளர் சோபிதாஸ் மற்றும் போலீசார் விரைந்து வந்து அந்த பகுதியில் போக்குவரத்தை நிறுத்தி மாற்றுப்பாதையில் திருப்பிவிட்டனர். மேலும் லாரியில் இருந்து வெளியேறிய கியாசை நிறுத்த முடியாத நிலை ஏற்பட்டது.மேலும் அத்திப்பட்டு, மணலி புதுநகர் பகுதிகளில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டனர்.

    இதைத்தொடர்ந்து சுமார் 2 மணிநேரத்திற்கு பிறகு கேஸ் நிறுவனத்தில் இருந்து வந்த ஊழியர்கள் டேங்கரில் இருந்து கியாஸ்கசிவு ஏற்பட்ட பகுதியை சரிசெய்தனர். இதன்பின்னர் கியாஸ் ஏற்றிய லாரி அங்கிருந்து புறப்பட்டு சென்றது.

    இதனால் மீஞ்சூர்- திருவொற்றியூர் சாலையில் சுமார் 2 மணிநேரத்திற்கு மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கியாஸ் தீப்பற்றாததால் பெரிய அளவில் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

    Next Story
    ×