search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    குட்கா ஊழல் வழக்கு: சி.பி.ஐ. விசாரணை அதிகாரி நேரில் ஆஜராக சிறப்பு கோர்ட் உத்தரவு
    X

    குட்கா ஊழல் வழக்கு: சி.பி.ஐ. விசாரணை அதிகாரி நேரில் ஆஜராக சிறப்பு கோர்ட் உத்தரவு

    • முன்னாள் அமைச்சர்கள், உயர் அதிகாரிகளுக்கு எதிரான வழக்கில் விசாரணை நடத்த கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக கவர்னர் ஒப்புதல் அளித்தார்.
    • நீதிபதி தொடர்ந்து பல முறை இதே காரணத்தை கூறி வருவதாக அதிருப்தி தெரிவித்தார்.

    சென்னை:

    தமிழகத்தில் தடையை மீறி அதிகாரிகளுக்கு லஞ்சம் அளித்து குட்கா பொருள்கள் விற்கப்படுவதாக எழுந்த புகாரில் டெல்லி சி.பி.ஐ. வழக்கை விசாரித்து வருகிறது.

    இதில் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில்முருகன், மத்திய கலால்துறை அதிகாரி நவநீத கிருஷ்ண பாண்டியன், சுகாதாரத்துறை அதிகாரி சிவக்குமார் ஆகிய 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்த சி.பி.ஐ. இவர்களுக்கு எதிராக சென்னை சி.பி.ஐ. நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

    இந்நிலையில் முன்னாள் அமைச்சர்கள் முன்னாள் டி.ஜி.பி., சென்னை காவல் துறையின் முன்னாள் ஆணையர் உள்ளிட்ட மத்திய, மாநில அரசு உயர் அதிகாரிகளுக்கு எதிராக 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த கூடுதல் குற்றப்பத்திரிகை முழுமையாக இல்லை என்பதால் பிழையை சரி செய்து சி.பி.ஐ.யிடம் நீதிமன்றம் திரும்ப அளித்தது.

    இதையடுத்து முன்னாள் அமைச்சர்கள், உயர் அதிகாரிகளுக்கு எதிரான வழக்கில் விசாரணை நடத்த கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக கவர்னர் ஒப்புதல் அளித்தார்.

    இந்த வழக்கு சி.பி.ஐ. நீதிமன்ற நீதிபதி மலர் வாலன்டினா முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சி.பி.ஐ. தரப்பில் கூடுதல் குற்றபத்திரிகை தாக்கல் செய்யவும் நீதிமன்ற விசாரணைக்கும் இன்னும் ஒப்புதல் கடிதம் கிடைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

    அப்போது நீதிபதி தொடர்ந்து பல முறை இதே காரணத்தை கூறி வருவதாக அதிருப்தி தெரிவித்தார்.

    பின்னர் உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையின் நிலை என்ன என்பது குறித்து விசாரணை அதிகாரி அடுத்த விசாரணையின்போது நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை வருகிற 21-ந் தேதிக்கு தள்ளிவைத்தார்.

    Next Story
    ×