search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தாளவாடி பகுதியில் 2-வது நாளாக சூறைக்காற்றுடன் பலத்த மழை
    X

    தாளவாடி பகுதியில் 2-வது நாளாக சூறைக்காற்றுடன் பலத்த மழை

    • தாளவாடியில் இருந்து ராமாபுரம் செல்லும் சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    • ராமபுரம், பாரதிபுரம் கிராமத்தில் சூறைக்காற்றால் 6 மின்கம்பங்கள் முறிந்து சேதமடைந்தது.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் கடந்த மாதங்களாக கடும் வெயில் வாட்டி வந்தது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டது. குடிநீரை விலைக்கு வாங்கும் விலைக்கு அப்பகுதி மக்கள் தள்ளப்பட்டனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை நேரங்களில் கடும் வெயில் வாட்டி வருவதும் மதியம் 3 மணிக்கு மேல் சூறைக்காற்றுடன் மிதமான மழையும் சில இடங்களில் பலத்த மழையும் பெய்து வருகிறது.

    சூறைக்காற்றால் வாழை மரங்களும் முறிந்து சேதமடைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்தனர். இந்த நிலையில் நேற்று மதியம் 3 மணியளவில் மேகமூட்டம் சேர்ந்து தூரல் மழையாக ஆரம்பித்து தாளவாடி, கும்டாபுரம், பாரதிபுரம், ராமாபுரம், ஓசூர், தொட்ட காஜனூர், கரளவாடி ஆகிய பகுதிகளில் சூறைக்காற்றுடன் 15 நிமிடம் மிதமான மழை பெய்தது.

    சூறைக்காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் ராமாபுரம் கிராமத்தில் உள்ள விவசாயி தீபு (வயது 35) என்பவரின் 700 நேந்திரம் வாழைகள், சுந்தரமூர்த்தி என்பவரின் 1000 வாழைகள், ராசு என்பவரின் 1000 வாழைகள், தொட்டகாஜனூர் சிவண்ணா என்பவரின் 1000 வாழைகள் என மொத்தம் 4 ஆயிரம் வாழைகள் முறிந்து நாசமானது.

    அதேபோல தாளவாடியில் இருந்து ராமாபுரம் செல்லும் சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அங்கு சென்ற நெடுஞ்சாலைத்துறையினர் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். அதேபோல் ராமபுரம், பாரதிபுரம் கிராமத்தில் சூறைக்காற்றால் 6 மின்கம்பங்கள் முறிந்து சேதமடைந்தது.

    அதை சீர் செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல்வேறு இடங்களில் மின்தடையும் ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் தாளவாடி மலை பகுதியில் சூறைக்காற்றுக்கு சேதம் அடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

    ஒருபுறம் மழை வந்து சந்தோசம் இருந்த போதும் சூறைக்காற்றால் வாழை சேதம் அடைந்துள்ளதால் மலைப்பகுதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தமிழக அரசு கள ஆய்வு மேற்கொண்டு சேதம் அடைந்த வாழைகளுக்கு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

    மேலும் கடந்த 2 நாட்களில் மட்டும் ரூ.20 லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் மாவட்ட எல்லை பகுதியான தாளவாடி சுற்று வட்டார பகுதியில் கடந்த 2 நாட்களாக சூறைகாற்றுடன் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×