search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நீலகிரியில் விடிய விடிய மழை: மேட்டுப்பாளையம்-குன்னூர் மலை ரெயில் இன்று ரத்து
    X

    மலை ரெயில் தண்டவாளத்தில் மரங்கள், மண்சரிந்து கிடப்பதை காணலாம்.

    நீலகிரியில் விடிய விடிய மழை: மேட்டுப்பாளையம்-குன்னூர் மலை ரெயில் இன்று ரத்து

    • கடந்த ஒரு மாதமாக நீலகிரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.
    • ரெயிலில் பயணித்த பயணிகள் அனைவருக்கும் அவர்களது பயண சீட்டு தொகை திருப்பி அளிக்கப்பட்டது.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்கு மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

    இந்த மலைரெயில் அடர்ந்த வனப்பகுதிக்கு நடுவே, பயணிப்பதால் குகைகள், இயற்கை காட்சிகள், அருவிகளை பார்க்க முடியும் என்பதால் இந்த ரெயிலில் பயணிக்க நீலகிரிக்கு வரும் அனைத்து சுற்றுலா பயணிகளும் விரும்புவார்கள்.

    உள்ளூர் பயணிகள் மட்டுமல்லாமல், இங்கு வரக்கூடிய வெளியூர், வெளிநாடுகளை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    மேட்டுப்பாளையத்தில் இருந்து தினசரி காலை 7.10 மணிக்கு நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு மலை ரெயில் இயக்கப்படுகிறது.

    கடந்த ஒரு மாதமாக நீலகிரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    நேற்றும் மழை நீடித்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்து கொண்டே இருந்தது. இரவு விடியவிடிய மழை பெய்தது.

    இந்த மழைக்கு, குன்னூர்-மேட்டுப்பாளையம் மலை ரெயில் பாதையில் ஹில்குரோவ்-ஆடர்லி இடையே தண்டவாளத்தில் மரங்கள் முறிந்து விழுந்து கிடந்தன.

    அத்துடன் மண்சரிந்து தண்டவாளத்தில் கிடந்தது. இன்று காலை வழக்கம் போல மேட்டுப்பாளையத்தில் இருந்து மலை ரெயில் குன்னூரை நோக்கி புறப்பட்டது.

    ஹில்குரோவ்-ஆடர்லி இடையே ரெயில் தண்டவாளத்தில் மரம் மற்றும் மண், பாறைகள் கிடந்தன. இதை பார்த்த ரெயில் என்ஜின் டிரைவர் உடனடியாக மலைரெயிலை அதே இடத்தில் நிறுத்தி விட்டார். இது தொடர்பாக ரெயில்வே அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து ரெயில் டிரைவர் ரெயிலை பின்னோக்கி இயக்கி, மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்திற்கு வந்தது.

    ரெயிலில் பயணித்த பயணிகள் அனைவருக்கும் அவர்களது பயண சீட்டு தொகை திருப்பி அளிக்கப்பட்டது.

    இதற்கிடையே மண்சரிவு மற்றும் மரம் முறிந்து விழுந்ததால் மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே மலைரெயில் போக்குவரத்து சேவை இன்று ஒரு நாள் மட்டும் ரத்து செய்யப்படுவதாக சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

    இதனால் மலைரெயிலில் பயணிக்கலாம் என சுற்றுலா பயணிகள் ஆசையோடு வந்த சுற்றுலா பயணிகள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.

    Next Story
    ×