என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தேனி மாவட்டத்தில் வெளுத்து வாங்கிய மழை- அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்
    X

    மேகமலை வனப்பகுதியில் பெய்த தொடர் மழையால் சின்னச்சுருளி அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    தேனி மாவட்டத்தில் வெளுத்து வாங்கிய மழை- அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்

    • கொடைக்கானலில் பெய்த மழையால் கும்பக்கரை அருவியில் நீர்வரத்து அதிகரித்ததைத் தொடர்ந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் அங்கு குவிந்தனர்.
    • முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து இல்லாமல் காணப்பட்டது.

    கூடலூர்:

    தமிழகத்தில் தேனி, திண்டுக்கல் உள்பட 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்தது. அதன்படி கடந்த 2 நாட்களாக தேனி மாவட்டம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்து வருகிறது. நேற்று இரவு பெரியகுளம், ஆண்டிபட்டி, மஞ்சளாறு உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    கனமழையால் பெரியகுளம் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இரவு முழுவதும் மின் வினியோகம் இல்லாததால் பொதுமக்கள் அவதியடைந்தனர். கோடை வெயிலால் கும்பக்கரை, சுருளி அருவி, சின்னச்சுருளி அருவி உள்பட பல்வேறு அருவிகள் தண்ணீர் இன்றி வறண்டு காணப்பட்டது. இந்த நிலையில் தற்போது பெய்த தொடர் மழையால் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    கொடைக்கானலில் பெய்த மழையால் கும்பக்கரை அருவியில் நீர்வரத்து அதிகரித்ததைத் தொடர்ந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் அங்கு குவிந்தனர். குளிர்ச்சியான சூழல் நிலவியதால் அவர்கள் உற்சாகமடைந்தனர். இதே போல் ஹைவேவிஸ், மேகமலை பகுதியில் பெய்த கனமழையால் சின்னச்சுருளியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து இல்லாமல் காணப்பட்டது.

    இந்த நிலையில் இன்று காலை 204 கன அடி நீர் வரத்தொடங்கியது. அணையில் இருந்து 100 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 115.85 அடியாக உள்ளது. வைகை அணையின் நீர் மட்டம் 53.94 அடியாக உள்ளது. 14 கன அடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 72 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 37.70 அடியாக உள்ளது. 14 கன அடி நீர் வருகிறது. திறப்பு இல்லை. சோத்துப்பாறை அணை நீர் மட்டம் 58.64 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. தேக்கடி 29, கூடலூர் 1.2, உத்தமபாளையம் 1.4, சண்முகாநதி அணை 17.6, வைகை அணை 8.4, சோத்துப்பாறை 2, மஞ்சளாறு 60, பெரியகுளம் 28, அரண்மனைப்புதூர் 1 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

    Next Story
    ×