search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    300 ஆண்டுகளாக நடந்து வரும் அதிசயம்: மொகரம் பண்டிகையை கொண்டாடிய இந்துக்கள்
    X

    பஞ்சா கரகம் என்று அழைக்கப்படும் அல்லா சாமிக்கு எலுமிச்சம் மாலை அணிவிக்கப்பட்டு தீ மிதிக்கும் இடத்திற்கு தாரை தப்பட்டை முழங்க ஊர்வலமாக கொண்டுவரப்பட்டதை காணலாம்

    300 ஆண்டுகளாக நடந்து வரும் அதிசயம்: மொகரம் பண்டிகையை கொண்டாடிய இந்துக்கள்

    • மொகரம் பண்டிகையை தங்கள் இல்ல விழாவாக இந்துக்கள் கொண்டாடி சமூக நல்லிணக்கத்தை போற்றி வருகின்றனர்.
    • இஸ்லாமியர்களின் பஞ்சா எனப்படும் கரகத்தை கிராமத்தில் உள்ள இந்துக்களின் வீடுகளுக்கு தாரை தப்பட்டையுடன் கொண்டு சென்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் அருகே உள்ளது காசவளநாடு புதூர் கிராமம். இந்த கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதில் பெரும்பாலான மக்கள் இந்துக்கள் ஆவர்.

    இவர்கள் ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமியர்களின் பண்டிகையான மொகரம் பண்டிகையை விமர்சையாகக் கொண்டாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

    இந்த கிராமத்தில் சாதி மத பேதம் இல்லாமல் அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். இதற்காக ஆண்டுதோறும் மொகரம் பண்டிகையை தங்கள் இல்ல விழாவாக இந்துக்கள் கொண்டாடி சமூக நல்லிணக்கத்தை போற்றி வருகின்றனர்.

    அதன்படி இன்று இஸ்லாமியர்களால் மொகரம் பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. மற்ற கிராமத்தைக் காட்டிலும் காசவளநாடு கிராம இந்து மக்கள் வழக்கம் போல் இந்த ஆண்டும் மொகரம் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர். மொகரம் பண்டிகை கொண்டாடுவதற்கு 10 நாட்களுக்கு முன்பாகவே இந்துக்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேற விரதமிருந்து பயபக்தியோடு பண்டிகைக்கு தயாராகி வந்தனர்.

    அதன்படி இன்று இஸ்லாமியர்களின் பஞ்சா எனப்படும் கரகத்தை கிராமத்தில் உள்ள இந்துக்களின் வீடுகளுக்கு தாரை தப்பட்டையுடன் கொண்டு சென்றனர். அப்போது ஒவ்வொரு வீடுகளிலும் உள்ள மக்கள் தங்களது வேண்டுதல் நிறைவேற அந்த கரகத்திற்கு தண்ணீர் ஊற்றி எலுமிச்சை மாலை மற்றும் பட்டுத் துண்டை சாத்தி வேண்டிக்கொண்டனர். பின்னர் அங்குள்ள அல்லா கோவிலுக்கு கொண்டு வந்து பாத்தியா ஓதி தங்களது உறவினர்கள், பொதுமக்களுக்கு வழங்கினர்.

    இதையடுத்து அந்த பஞ்சா கரகம் அங்குள்ள பூக்குழியில் இறங்கியவுடன் அல்லா சாமியை சுமந்து வந்தவர்கள் முதலில் தீ மிதித்தனர். பின்னர் பயபக்தியுடன் மற்ற பொதுமக்கள் தீ மிதித்து வழிபாடு செய்தனர். தொடர்ந்து அனைவருக்கும் திருநீறு, எலுமிச்சை பழம் பிரசாதமாக வழங்கப்பட்டது. இதனால் இன்று அந்த கிராமமே விழாக்கோலம் பூண்டது.

    இதுகுறித்து காசவளநாடு புதூரைச் சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், இஸ்லாமியர்களின் பண்டிகையான மொகரம் பண்டிகையை இந்துக்கள் அதிகம் உள்ள எங்களது ஊரில் எங்களது முன்னோர்கள் வழிகாட்டுதலின்படி தொடர்ந்து பாரம்பரியமாக 300 ஆண்டுகளுக்கும் மேலாக நாங்கள் கொண்டாடி வருகிறோம் என்றனர்.

    Next Story
    ×