search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தொடர் விடுமுறை எதிரொலி: தனியார் ஆம்னி பஸ்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு
    X

    தொடர் விடுமுறை எதிரொலி: தனியார் ஆம்னி பஸ்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு

    • சென்னையில் இருந்து பெங்களூருக்கு ரூ.3 ஆயிரம், விஜயவாடாவுக்கு ரூ.2,200 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
    • பல்வேறு பகுதிகளுக்கு வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக 505 சிறப்பு பஸ்கள் இன்று இயக்கப்படுகிறது.

    சென்னை:

    புனித வெள்ளியையொட்டி நாளை அரசு விடுமுறை ஆகும். தொடர்ந்து சனி, ஞாயிறு விடுமுறை வருகிறது. 3 நாட்கள் தொடர் விடுமுறை வருவதால் சென்னையில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.

    தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில் அனைவரது கவனமும் தேர்தல் பிரசாரத்தை நோக்கி திரும்பியுள்ளதால், தொடர் விடுமுறைக்காக சொந்த ஊர் செல்பவர்களிடம், தனியார் ஆம்னி பஸ்கள் ஓசையில்லாமல் கட்டணத்தை உயர்த்திவிட்டன.

    சென்னையில் இருந்து மதுரைக்கு இன்று தனியார் ஆம்னி பஸ்களில் செல்வதற்கான கட்டணம் ரூ.5 ஆயிரம் ஆக அதிகரித்துள்ளது. இதேபோல் கோவைக்கு செல்வதற்கும் ரூ.5 ஆயிரம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதுவே சாதாரண நாட்களில் கட்டணம் ரூ.700 முதல் ரூ.1000 வரை ஆகும்.

    இதேபோல் சென்னையில் இருந்து பெங்களூருக்கு ரூ.3 ஆயிரம், விஜயவாடாவுக்கு ரூ.2,200 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தனியார் ஆம்னி பஸ்களில் வழக்கத்தை விட 3 மடங்கு முதல் 5 மடங்கு வரை கட்டணம் உயர்ந்துள்ளது.

    மற்ற பண்டிகை காலத்தில் வரும் வார இறுதி நாட்களை போலவே, தற்போதும் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்கள் நிரம்பி வழிகின்றன. மேலும் தட்கல் முறையிலும் டிக்கெட்டை முன்பதிவு செய்ய முடியவில்லை. இதனால் வேறு வழியின்றி பொதுமக்கள் ஆம்னி பஸ்களை நாட வேண்டிய சூழ்நிலை உள்ளது. ஆனால் பஸ் கட்டணம் கிட்டத்தட்ட விமானக் கட்டணத்துக்கு இணையாக உள்ளது. எனவே, குடும்பத்துடன் ஊருக்கு செல்ல விரும்பும் பொதுமக்கள் கூடுதல் கட்டணத்தால் தவிக்கிறார்கள்.

    அதே நேரத்தில் அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் தொடர் விடுமுறையையொட்டி சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக 505 சிறப்பு பஸ்கள் இன்று இயக்கப்படுகிறது. இந்த வார இறுதியில் மேலும் 650 பஸ்கள் புதிய கிளாம்பாக்கம் பஸ் நிலையம், கோயம்பேடு மற்றும் மாதவரத்தில் இருந்து பயணிகளை ஏற்றி செல்லும் என்று அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

    அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்களில் சொந்த ஊருக்கு செல்வதற்காக இன்று மட்டும் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். கிளாம்பாக்கத்திற்கு வரும் ஒவ்வொரு பஸ்சிலும் முன்பதிவு செய்த பயணிகளின் எண்ணிக்கை நிரம்பி வழிகிறது. இதனால் முன்பதிவு செய்யாத பயணிளுக்கு இருக்கை கிடைப்பதில்லை. இதனால் முன்பதிவு செய்யாத பயணிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகிறார்கள்.

    ஒவ்வொரு வார இறுதியிலும், கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் பயணிகள் தொடர்ந்து அவதிப்பட்டு வருகிறார்கள். மேலும் அங்குள்ள அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்த பிறகுதான் கூடுதல் பஸ்கள் இயக்கபடுவதாகவும் பயணிகள் தெரிவிக்கி ன்றனர். எனவே வார இறுதி நாட்களில் முன்பதிவு செய்யாத பஸ்களை அதிக அளவில் இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×