search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    கடல் சீற்றம்- வீடுகளுக்குள் குவிந்து கிடக்கும் மணல் குவியல்களால் பொதுமக்கள் அவதி

    • வெள்ளம் புகுந்த வீடுகளில் உள்ள பொதுமக்களை நிவாரண முகாம்களில் தங்க வைத்தனர்.
    • பிள்ளைதோப்பு, அழிக்கால் பகுதியில் ஒரு சில பகுதிகளில் வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் ஜூன், ஜூலை மாதங்களில் கடல் சீற்றமாக காணப்படும். இது தவிர அமாவாசை தினங்களிலும், புயல் சின்னங்கள் ஏற்படும் போதும் கடல் சீற்றம் அதிகமாக இருக்கும்.

    வங்கக்கடலில் தென்மேற்கு பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதையடுத்து குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவ கிராமங்களுக்கு முன்னெச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கன்னியாகுமரி, சின்னமுட்டம், அழிக்கால், கணபதிபுரம், தேங்காய்பட்டினம், பிள்ளைத்தோப்பு, பகுதிகளில் கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டது. ராட்சத அலைகள் எழும்பின. குறிப்பாக அழிக்கால், பிள்ளைதோப்பு பகுதியில் எழும்பிய ராட்சத அலைகள் குடியிருப்பு பகுதியிலும் புகுந்தது. சுமார் 150-க்கு மேற்பட்ட குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்ததால் நேற்று முன்தினம் இரவு பொதுமக்கள் விடிய, விடிய தூங்காமல் தவித்தனர்.

    வெள்ளம் புகுந்த வீடுகளில் உள்ள பொதுமக்களை நிவாரண முகாம்களில் தங்க வைத்தனர். பிள்ளைத்தோப்பு, அழிக்கால் பகுதியில் நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டு அங்கு அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    தற்பொழுது 235 பேர் நிவாரண முகாம்களில் தங்கி உள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. வீடுகளை சூழ்ந்த தண்ணீர் நேற்று மாலை முதலே வடிய தொடங்கியது. ஒரு சில பகுதிகளில் வீடுகளை சூழ்ந்த தண்ணீர் வடிந்துள்ளது.

    பிள்ளைதோப்பு, அழிக்கால் பகுதியில் ஒரு சில பகுதிகளில் வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதையடுத்து அந்த பகுதியில் தேங்கியிருந்த தண்ணீரை அப்புறப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மோட்டார் மூலமாக தண்ணீரை அகற்றும் பணியில் பேரூராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.


    இதுமட்டுமின்றி ஜே.சி.பி. எந்திரம் மூலமாக ரோடுகள் சீரமைப்பு மற்றும் தேங்கி கிடக்கும் தண்ணீரை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. தூய்மை பணியாளர்கள் அங்குள்ள குப்பைகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். வீடுகளை சூழ்ந்த தண்ணீர் வடிந்தாலும் அழிக்காமல், பிள்ளைத்தோப்பு பகுதியில் வீடுகளுக்குள் மணல் அதிகளவு காணப்படுகிறது.

    எனவே பொதுமக்கள் அங்கு செல்ல முடியாத நிலை இருந்து வருகிறது. இதையடுத்து வீடுகளுக்குள் கிடக்கும் மணல் குவியல்களை அப்புறப்படுத்தும் பணியும் தொடங்கியுள்ளது. பிள்ளை தோப்பு பகுதியில் 34 வீடுகளும் அழிக்கால் பகுதியில் 41 வீடுகளிலும் மணல் குவியல்கள் உள்ளன. அந்த மணல் குவியல்களை பேரூராட்சி பணியாளர்கள் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இன்று காலை முதலே 100-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் அதை சரி செய்யும் பணியை மேற்கொண்டுள்ளனர். பிள்ளைத்தோப்பு, அழிக்கால் பகுதியில் அதிகாரிகள் முகாமிட்டு பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் அழிக்கால் பகுதியில் இன்றும் கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டது.

    லெமூர் கடற்கரை பகுதியில் கடல் சீற்றம் அதிகமாக உள்ளது. இதனால் இன்று 2-வது நாளாக கடற்கரைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. லெமூர் கடற்கரை நுழைவு வாயில் மூடப்பட்டுள்ளது .போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு ள்ளனர். சுற்றுலா பயணிகள் யாரையும் கடற்கரை பகுதிக்கு அனுமதிக்க வில்லை. இதேபோல் கன்னியாகுமரி, குளச்சல், தேங்காய்பட்டினம் பகுதியிலும் கடல் சீற்றமாகவே காணப்பட்டது. கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

    Next Story
    ×