search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சின்ன வெங்காயம் விலை கிலோ ரூ.70-க்கு விற்பனை- செங்கோட்டை விவசாயிகள் கவலை
    X

    சின்ன வெங்காயம் விலை கிலோ ரூ.70-க்கு விற்பனை- செங்கோட்டை விவசாயிகள் கவலை

    • விளைவதற்கு ஏற்ற நிலமாக உள்ளதால் கூடுதலாக பயிர் செய்கிறோம்.
    • விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு அரசே உரிய விலை நிர்ணயிக்க வேண்டும்.

    செங்கோட்டை:

    தென்காசி மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களாக சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.150-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் செங்கோட்டை சுற்றுவட்டார பகுதியில் இருந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். அவர்கள் சின்ன வெங்கயம் அதிக அளவில் பயிரிட்டிருந்ததால், விரைவாக அவற்றை எடுத்து மார்க்கெட்டுகளில் விற்பனை செய்தனர்.

    இந்நிலையில் திடீரென கடந்த 2 நாட்களாக சின்ன வெங்காயம் விலை ரூ.70 ஆக குறைந்துவிட்டது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். அதே நேரத்தில் பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். செங்கோட்டையை அடுத்த இலத்தூர், அச்சன்புதூர், சீவநல்லூர், கரிசல் குடியிருப்பு, சிவராம பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1,000 ஏக்கருக்கு மேல் செய்யவேண்டிய சின்ன வெங்காயம் சாகுபடியானது தென்மேற்கு பருவமழை பொய்த்ததால் குறைந்துவிட்டது. அங்கு நிலத்தடி நீரை மட்டுமே நம்பி உள்ள சுமார் 500 ஏக்கர் அளவிலான நிலங்களில் மட்டுமே சின்ன வெங்காயம் பயிரிடப்பட்டிருந்தது.

    இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், எங்கள் பகுதியில் நெல்லுக்கு அடுத்தப்படியாக சின்ன வெங்காயம் அதிகளவில் சாகுபடி செய்கிறோம். 2 மாத பயிரான சின்ன வெங்காயத்துக்கு தண்ணீர் அதிகம் தேவையில்லை. வாரம் ஒரு முறை தண்ணீர் பாய்ச்சினாலே போதும்.

    விளைவதற்கு ஏற்ற நிலமாக உள்ளதால் கூடுதலாக பயிர் செய்கிறோம். ஒரு ஏக்கருக்கு உழுவது, பயிரிடுவது, பூச்சிக்கு மருந்து அடித்தல், உரம் களையெடுத்தல், மழை பொய்த்தால் விலைக்கு வாங்கி தண்ணீர் பாய்ச்சல் உள்ளிட்ட வகையில் அறுவடை வரை ரூ.50 ஆயிரம் முதல் ரூ.75 ஆயிரம் வரை கூடுதலாக செலவாகிறது.

    அதற்கு தகுந்த மாதிரி அறுவடை தொடங்கிய காலத்தில் சென்ற மாதம் விலை ரூ.140 வரை விலை கிடைத்ததால் லாபகரமாக இருந்த நிலையில் தற்போது அறுவடை முடிந்த சின்ன வெங்காயம் ரூ.70-க்கும் விலை போகிறது. விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு அரசே உரிய விலை நிர்ணயிக்க வேண்டும். மழை காலங்களில் உரிய முறையில் சின்ன வெங்காயத்தை பாதுகாக்க வழிவகை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×