search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஈரோட்டில் பூண்டின் விலை குறைந்தது- கிலோ ரூ.300-க்கு விற்பனை
    X

    ஈரோட்டில் பூண்டின் விலை குறைந்தது- கிலோ ரூ.300-க்கு விற்பனை

    • பூண்டு வரத்து குறைந்ததன் காரணமாக தமிழகத்தில் பூண்டு விலை திடீரென அதிகரித்து வருகிறது.
    • ஈரோடு பூண்டு மண்டிக்கு மத்திய பிரதேசத்தில் இருந்து பூண்டுகள் வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.

    ஈரோடு:

    தமிழகத்தில் திண்டுக்கல், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் பூண்டு விளைச்சல் உள்ள நிலையில் வட மாவட்டங்களில் இருந்தும் பூண்டுகள் வரத்து காரணமாக பூண்டு விலை கட்டுக்குள் இருந்தது.

    இந்நிலையில் தமிழகத்தில் பூண்டு விளைச்சல் குறைவு மற்றும் வட மாநிலங்களில் இருந்து வரக்கூடிய பூண்டு வரத்து குறைந்ததன் காரணமாக தமிழகத்தில் பூண்டு விலை திடீரென அதிகரித்து வருகிறது.

    இதன் தொடர்ச்சியாக ஈரோடு வ.உ.சி. காய்கறி சந்தைக்கு தமிழகம், கர்நாடக, காஷ்மீர் உட்பட வெளி மாநிலங்களில் இருந்து லாரிகள் மூலம் வரக்கூடிய பூண்டு மூட்டை வரத்து கடந்த சில மாதங்களாக குறைந்து கொண்டே வந்ததால் கடந்த சில தினங்களுக்கு முன்பு கிலோ 180 ரூபாய்க்கு விற்பனை செய்த பூண்டு கடந்த வாரம் ஒரு கிலோ 400 ரூபாய் அதிகரித்து விற்பனையானது. இதனால் மொத்தம் வியாபாரம் மற்றும் சில்லரை வியா பாரம் பெரும் அளவில் பாதிப்பு ஏற்பட்டது.

    சமையலில் மிக இன்றியமையாததாக உள்ள பூண்டின் விலை ஏற்றதால் இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதன் தாக்கம் ஏழை மக்கள் மற்றும் நடுத்தர மக்களை கடுமையாக பாதித்துள்ளது.

    இந்நிலையில் இன்று ஈரோடு பூண்டு மண்டிக்கு மத்திய பிரதேசத்தில் இருந்து பூண்டுகள் வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதன் காரணமாக பூண்டின் விலை கிலோ ரூ.100 வரை குறைந்து உள்ளது. இன்று ஒரு கிலோ பூண்டு சில்லரை விற்பனையில் ரூ.300-க்கு விற்பனையானது. இதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்தனர்.

    இதுகுறித்து பூண்டு வியாபாரிகள் கூறும்போது,

    விளைச்சல் பாதிப்பு, வரத்து குறைவு காரணமாக கடந்த வாரம் பூண்டின் விலை புதிய உச்சத்தை தொட்டு ஒரு கிலோ ரூ.400-க்கு விற்பனையானது. இந்நிலையில் நேற்று முதல் மத்திய பிரதேசத்தில் இருந்து பூண்டு வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.

    இதன் எதிரொலியாக இன்று ஒரு கிலோ பூண்டு கிலோவுக்கு ரூ.100 குறைந்து ரூ.300-க்கு விற்பனை ஆகிறது. இன்னும் சில நாட்களில் ராஜஸ்தானில் இருந்து பூண்டு வரத்து அதிகரிக்க தொடங்கி விடும். இதனால் அடுத்த வாரம் பூண்டின் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளது என்றனர்.

    Next Story
    ×