search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    நாமக்கல் மண்டலத்தில் 10 நாட்களில் முட்டை விலை 120 காசுகள் சரிவு- விரைவில் விலை உயர வாய்ப்பு
    X

    நாமக்கல் மண்டலத்தில் 10 நாட்களில் முட்டை விலை 120 காசுகள் சரிவு- விரைவில் விலை உயர வாய்ப்பு

    • கடந்த ஜூன் மாதம் 30-ந் தேதி முதல் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.5.50 ஆக இருந்தது.
    • நாமக்கல் மண்டலத்தை பொறுத்தவரை பள்ளிக்களுக்கான சத்துணவு முட்டைகள் தொடர்ந்து சப்ளை செய்யப்பட்டு வருகிறது.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் சுமார் 8 கோடி முட்டை கோழிகள் வளர்க்கப்படு கின்றன. தினசரி சுமார் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு, தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதிக்கும் போக மீதமுள்ள முட்டைகள், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் லாரிகள் மூலம் தினசரி விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன.

    கடந்த ஜூன் மாதம் 30-ந் தேதி முதல் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.5.50 ஆக இருந்தது. பின்னர் தொடர்ந்து படிப்படியாக சரிவடைந்து கடந்த 8-ம் தேதி ரூ. 4.70 ஆக இருந்த முட்டை விலை மேலும் 20 பைசா குறைக்கப்பட்டு ரூ.4.50 ஆனது. நேற்று நடைபெற்ற என்.இ.சி.சி. கூட்டத்தில் முட்டை விலை மீண்டும் 20 பைசா குறைக் கப்பட்டு ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை ரூ.4.30 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனால் கடந்த 10 நாட்களில் மட்டும் முட்டை விலை 120 காசுகள் குறைந்துள்ளது.

    இந்தியாவில் உள்ள மற்ற மண்டங்களில் முட்டை விலை சரிவடைந்து வருவதால், நாமக்கல் மண்டலத்தில் விலை தொடர்ந்து குறைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    10 நாட்களில் ஒரு முட்டைக்கு ரூ. 1.20 விலை சரிவு ஏற்பட்டதால் கோழிப் பண்ணையாளர்கள் கவலை அடைந்துள்ளனர். முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (பைசாவில்) வருமாறு :-

    சென்னை-500, பர்வாலா-392, பெங்களூர்-460, டெல்லி-410, ஹைதராபாத்-425, மும்பை-530, மைசூர்-480, விஜயவாடா-425, ஹொஸ்பேட்-420, கொல்கத்தா-490.

    பிராய்லர் கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ. 98 ஆக பிசிசி அறிவித்துள்ளது. முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ. 82 ஆக பண்ணையாளர்கள் சங்கம் நிர்ணயித்துள்ளது.

    முட்டைவிலை சரிவு குறித்து பண்ணையாளர்கள் கூறியதாவது:-

    நாமக்கல் மண்டலத்தை பொறுத்தவரை பள்ளிக்களுக்கான சத்துணவு முட்டைகள் தொடர்ந்து சப்ளை செய்யப்பட்டு வருகிறது. தென்மேற்கு பருவமழை தொடங்கி சிறப்பாக கேரளாவில் பொழிந்து கொண்டிருப்பதால் கேரளா விற்பனை நன்றாக உள்ளது. ஏற்றுமதிக்கான முட்டைகளும் தொடர்ந்து அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

    வயது முதிர்ந்த கோழிகள் அதிக அளவில் பிடிக்கப்படுவதாலும் கடந்த காலங்களில் பண்ணைகளில் சராசரி அளவை விட குறைந்த கோழிக்குஞ்சு விடப்பட்டதாலும் முட்டை உற்பத்தி குறைந்து காணப்படுகிறது.

    நாமக்கல் மண்டலத்தில் உள்ள பண்ணைகளில் முட்டை பற்றாக்குறை தொடர்வதால், வரும் நாட்களில் முட்டை விலை மேலும் ஏறுவதற்கு வாய்ப்புகள் உள்ளது, என்றனர்.

    Next Story
    ×