search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    எதிர்க்கட்சிகளின் குரல் நசுக்கப்படுகிறதா? - விவாதமாகும் சபாநாயகரின் பேச்சு
    X

    எதிர்க்கட்சிகளின் குரல் நசுக்கப்படுகிறதா? - விவாதமாகும் சபாநாயகரின் பேச்சு

    • சட்டசபையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவது எதுவும் அவைகுறிப்பில் இடம் பெறாது.
    • எதிர்கட்சியினரின் உரைகளை வெளியிடுவதற்கோ எழுதுவதற்கோ எந்த ஊடகத்திற்கும் உரிமை இல்லை.

    தமிழக சட்டசபை கூட்டத்தொடரின் மூன்றாம் நாள் அலுவல் இன்று தொடங்கியது. சபாநாயகர் அப்பாவு கேள்வி-பதிலுக்கான நிகழ்ச்சி நிரல் தொடங்குவதாக அறிவித்தார். இந்த சமயத்தில் கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று அ.தி.மு.க. உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

    கேள்வி நேரம் முடிந்ததும் பேச அனுமதிப்பதாக சபாநாயகர் அப்பாவு கூறிய நிலையில், சட்டசபையில் இருந்து அ.தி.மு.க.வினர் வெளிநடப்பு செய்தனர்.

    இதையடுத்து கள்ளச்சாராயம் உயிரிழப்பு குறித்து கட்டாயம் சிபிஐ விசாரணை தேவை என்று எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார்.

    இந்நிலையில் கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்த நிலையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இன்றைய விவாதத்தை புறக்கணித்துள்ளனர்.

    இந்நிலையில், சபாநாயகர் அப்பாவு சட்டப்பேரவையில் பேசிய வீடியோவை அரசியல் விமர்சகர் சுமந்த சி ராமன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், "சட்டசபையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவது எதுவும் அவைகுறிப்பில் இடம் பெறாது என்றும் எதிர்கட்சியினரின் உரைகளை வெளியிடுவதற்கோ எழுதுவதற்கோ எந்த ஊடகத்திற்கும் உரிமை இல்லை" என்று சபாநாயகர் பேசுகிறார்.

    ஏற்கனவே சட்டசபையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசும் வீடியோவை முழுமையாக ஒளிபரப்புவதில்லை என்று குற்றச்சாட்டு உள்ளது. இப்போது சபாநாயகர் அவர்களே இப்படி பேசுவது ஜனநாயகமா என்று நெட்டிசன்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    சட்டசபையில் சட்டமன்ற உறுப்பினர்கள் பேசுவதை தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் சுமந்த சி ராமன் கோரிக்கை விடுத்துள்ளார்.

    Next Story
    ×