search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கொடி, சின்னம் பயன்படுத்திய விவகாரம்: நடவடிக்கை எடுக்காவிட்டால் வழக்கு தொடருவோம் அ.தி.மு.க. நிர்வாகிகள்

    • மாநாட்டு மேடையின் முகப்பு பகுதி அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தின் மாதிரியில் அமைக்கப்பட்டுள்ளது.
    • எங்கள் புகார் மீது காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    திருச்சி:

    திருச்சி பொன்மலை ஜி. கார்னரில் இன்று மாலை ஓ.பி.எஸ். அணியின் முப்பெரும் விழா மாநாடு நடைபெறுகிறது. அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள நிலையில் இந்த மாநாட்டில் ஓ.பி.எஸ். அணியினர் கட்சி கொடி, சின்னம், பெயரை பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்று கூறி போலீசில் கடந்த சனிக்கிழமை புகார்கள் அளிக்கப்பட்டன.

    ஏற்கனவே கட்சி பெயர், சின்னம், கொடி ஆகியவற்றை பயன்படுத்தினால் வழக்கு தொடரப்படும் என்று பொள்ளாச்சி ஜெயராமன் அறிவித்து இருந்தார். இதுதொடர்பாக ஓ.பி.எஸ். அணி நிர்வாகிகள் கூறுகையில், நாங்கள் அ.தி.மு.க. கொடி, சின்னத்தை பயன்படுத்துவோம். எங்கள் மீது வழக்கு தொடர்ந்தால் அதனை சந்திக்க தயாராக இருக்கிறோம் என்றனர். அதேபோல் சற்று திருத்தம் செய்யப்பட்ட கொடி திருச்சி மாநாட்டில் முழுக்க முழுக்க பயன்படுத்தப்பட்டு உள்ளது.

    மேலும் மாநாட்டு மேடையின் முகப்பு பகுதி அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தின் மாதிரியில் அமைக்கப்பட்டுள்ளது. இது அ.தி.மு.க.வினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதுதொடர்பாக திருச்சி மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் கூறுகையில், ஏற்கனவே திருச்சி மாநாடு உள்பட எந்த இடத்திலும் அ.தி.மு.க.வின் கொடி, சின்னத்தை பயன்படுத்தக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து கடந்த சனிக்கிழமை திருச்சி போலீசில் புகார்கள் அளித்துள்ளோம்.

    அதையும் மீறி இந்த மாநாட்டிற்காக அ.தி.மு.க. பெயர் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை எங்கள் புகார் மீது காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே கட்சி தலைமையிடம் ஆலோசித்த பின்னர் கோர்ட்டில் வழக்கு தொடருவோம் என்றார்.

    Next Story
    ×