என் மலர்
தமிழ்நாடு
பாஜகவுக்கு ஜம்மு காஷ்மீர் மக்கள் பாடம் புகட்டியுள்ளனர்- திருமாவளவன்
- பாஜகவுக்கு ஜம்மு காஷ்மீர் மக்கள் மிகப் பெரிய பாடத்தை புகட்டி உள்ளனர்.
- கூட்டணி கட்சிகளை ஒருங்கிணைப்பதில் காங்கிரஸ் இன்னும் தீவிரம் காட்ட வேண்டும்.
அரியானாவில் நடந்து முடிந்த தேர்தலில் பெரும்பான்மை இடங்களை பிடித்து 3ம் முறையாக பாஜக ஆட்சியை பிடித்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் நடந்த தேர்தலில் காங்கிரஸ் - தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி பெரும்பான்மை இடங்களை பெற்று ஆட்சியை பிடித்துள்ளது.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீர், அரியானா தேர்தல் முடிவுகள் குறித்து எம்.பி. திருமாவளவனிடம் செய்தியாளர்கள் சந்தித்து பேசினார். அதற்கு பதில் அளித்த அவர், "ஜம்மு காஷ்மீரில் எதிர்பார்த்தது போல இந்தியா கூட்டணி தேசிய மாநாடு கட்சி பெரிய அளவில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றி உள்ளது. பாஜகவுக்கு ஜம்மு காஷ்மீர் மக்கள் மிகப் பெரிய பாடத்தை புகட்டி உள்ளனர்.
ஹரியானாவில் கருத்துக்கணிப்பில் சொன்னது போல நடக்கவில்லை. இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஆம் ஆத்மி போன்ற கட்சிகள் சிதறிப் போய் தனித்தனியாக நின்றதால் வாக்குகள் சிதறிப் போய்விட்டன.
இனிவரும் மாநில சட்டமன்ற தேர்தல்களில் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் ஒற்றுமையாக இருக்க வேண்டும், ஒருங்கிணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்பதற்கு இது ஒரு பாடம்.
ஹரியானாவில் வலுவான எதிர்க்கட்சி உருவாகியுள்ளது. பிற கட்சிகள் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்திருந்தால் பாஜகவின் வெற்றியை தடுத்திருக்க முடியும். கூட்டணி கட்சிகளை ஒருங்கிணைப்பதில் காங்கிரஸ் இன்னும் தீவிரம் காட்ட வேண்டும்.
அகில இந்திய அளவில் இளைஞர்கள் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க முன் வருகிறார்கள். நாடாளுமன்றத் தேர்தலில் 100 இடத்தில் வெற்றி பெற்றதும் வாக்கு சதவீதத்தை அதிகரித்ததும் அதற்கு ஒரு சான்று" என்று தெரிவித்தார்.