search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    இராமர் கோவில்-பாபர் மசூதி விவகாரத்தில் ஜெயலலிதா பேசிய ஆடியோவை வெளியிட்ட ஜெயக்குமார்
    X

    இராமர் கோவில்-பாபர் மசூதி விவகாரத்தில் ஜெயலலிதா பேசிய ஆடியோவை வெளியிட்ட ஜெயக்குமார்

    • தான் ஒரு 'Proud Kannadiga' என்பதற்காக இந்த அவதூறை அண்ணாமலை கையில் எடுத்துள்ளார்.
    • மதவெறி கொண்ட யானையை விட 'மத'வெறி பிடித்துள்ள பாஜக நாட்டிற்கு ஆபத்தானது.

    அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது எக்ஸ் பக்கத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இராமர் கோவில்-பாபர் மசூதி விவகாரம் தொடர்பாக பேசிய ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த ஆடியோவில், "மசூதியை இடித்துவிட்டு அந்த இடத்தில் மீண்டும் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்று விஷ்வ ஹிந்து பரிஷத் பிடிவாதமாக உள்ளது. இந்துக்களின் மத உணர்வை தூண்டி, ராமர் கோவில் கட்டுவதற்கு விஷ்வ ஹிந்து பரிஷத் ஆதரவை பெற்று வருகிறது. மசூதியை இடிக்க கூடாது என்பதை வலியுறுத்த பாபர் மசூதி பாதுகாப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டு முஸ்லிம்களின் மத்தியில் ஆதரவை திரட்டி வருகிறது.

    அரசியல்வாதிகள் அரசியல் நோக்கத்தை கொண்டு ஒருசாரார் இந்துக்கள் பக்கமும் இன்னொரு சாரார் முஸ்லிம்கள் பக்கமும் நின்று கொண்டு பிரச்சனையை வளர்த்து வருகின்றனர். எனவே தான் பிரச்சனை எந்த முடிவுக்கும் வராமல் நாட்டை ஒரு அழிவு பாதைக்கு இழுத்துக் கொண்டு செல்கிறது.

    எனவேதான் இரு மதத்தை சேர்ந்த தலைவர்களும் ஒரு இடத்தில் ஒன்று கூடி ஒருமித்த ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.இதைத்தான் இரு மதங்களையும் சேர்ந்த மக்கள் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்வார்கள்.

    எனவே இந்த பிரச்சனையை தேர்தல் பிரச்சனையாக ஆக்கிட வேண்டாம் என்று இந்திய வாக்காள பெருமக்களுக்கு எங்களது கோரிக்கையாக தெரிவித்து கொள்கிறோம்" என்று ஜெயலலிதா பேசியுள்ளார்.

    இந்த ஆடியோ தொடர்பாக ஜெயக்குமார் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "இரு மதங்களுக்கும் நடுநிலையாகவே தனது நிலைப்பாட்டை தெளிவாக தெரிவித்துள்ளார். இது தான் அம்மா அவர்களின் அன்றைய உண்மையான நிலைப்பாடு.

    அந்த செய்தித்தாளில் வந்தது இந்த செய்தித்தாளில் வந்தது என அறமற்று கருத்துகளை பேசுவது அரசியல் முதிர்ச்சியின்மையை மக்களுக்கு காட்டுகிறது.

    அவர் இன்று இல்லை என்றவுடன் அவதூறு பரப்பி அவரை கலங்கபடுத்த நினைப்பவர்கள் காணாமல் போவார்கள்.

    ஒருவரது தெய்வ நம்பிக்கையை மத நம்பிக்கையாக திரித்து மத தலைவராக மாற்ற நினைப்பது தான் பாஜகவின் எண்ணம்.

    ஒரு தமிழன் என்ற ஒரே காரணத்திற்காக ஒரிசாவில் வளர கூடாது என இனத்தை வைத்து அடையாளபடுத்தி பிளவுபடுத்த நினைப்பதும் மதங்கள் கடந்து எல்லோரும் அம்மாவாக எண்ணுகிற மாபெரும் சமுகநீதி காத்த தலைவரை ஒரு மத தலைவர் என சொல்லி மதத்தால் பிளவுபடுத்த நினைப்பதும் தான் பாஜகவின் கொடூர கொள்கை.

    தங்கள் சாதனைகளை தங்கள் தலைவர்களை பற்றி பேச முடியாமல் அம்மா அவர்கள் மீது அவதூறு பரப்பி அண்ணாமலை, தமிழிசை போன்றோர் விளம்பர தேடும் முயற்சி வீணாகும் தவிர விவாதம் ஆகாது.

    முல்லை பெரியாறு விவகாரம், மேகதாது-காவிரி விவகாரம், பாலாறு விவகாரம் என தமிழ்நாட்டை சுற்றி மும்முனையிலும் இருந்து தமிழ் மண்ணிற்கு பேராபத்து நேர உள்ளது.

    இதில் இருந்து திசை திருப்பி திமுக அரசை காப்பாற்றவும், தங்கள் டெல்லி ஓனர்களை நோக்கி எந்த கேள்வியும் வரக்கூடாது என்பதற்காகவும், தான் ஒரு 'Proud Kannadiga' என்பதற்காகவும் இந்த அவதூறை அண்ணாமலை கையில் எடுத்துள்ளார்.

    மதவெறி கொண்ட யானையை விட 'மத'வெறி பிடித்துள்ள பாஜக நாட்டிற்கு ஆபத்தானது என்பது அண்ணாமலை போன்றோரின் பேச்சுகளில் இருந்து உணர முடிகிறது.

    ஒற்றுமையும் ஒருமைப்பாடும் மிக்க தேசத்தை துண்டாட நினைப்பதை விட்டுவிட்டு மக்கள் பிரச்சினைகளை பேசுவதே நாட்டின் நலம் என்பதை எத்தனை ஜென்மங்கள் கழித்து இந்த பாஜக உணரப் போகிறதோ?

    தமிழ் மக்களின் மனங்களை வென்று இன்றும் அன்னையாக நிற்கும் அம்மாவின் புகழ் என்றும் இந்த மண்ணில் நிலைத்து நிற்கும்" என்று தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×