search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கபாலீசுவரர் கோவில் அறுபத்து மூவர் விழா: லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்
    X

    கபாலீசுவரர் கோவில் அறுபத்து மூவர் விழா: லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்

    • அறுபத்து மூவர் விழா இன்று பிற்பகல் 3.30 மணி அளவில் தொடங்கி நடைபெற உள்ளது
    • உணவு பொருட்களை சாப்பிடும் பக்தர்கள் குப்பைகளை சாலையில் வீசாமல் இருப்பதற்காக சாலையோரம் 340 குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.

    சென்னை:

    சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி பெருவிழா கடந்த 16-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. நேற்று தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. காலை 8 மணி அளவில் திருத்தேருக்கு கபாலீஸ்வரர், கற்பகாம்பாள் எழுந்தருளினர்.

    காலை 9 மணி அளவில் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் தொடங்கியது. 96 அடி உயரம், 300 டன் எடை கொண்ட தேரை, ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் 'சம்போ மகாதேவா' என்ற கோஷத்துடன் வடம் பிடித்து இழுத்தனர். 4 மாட வீதிகளில் வலம்வந்த தேர், பிற்பகல் 1.30 மணி அளவில் நிலையை வந்தடைந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    பங்குனி பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான அறுபத்து மூவர் விழா இன்று பிற்பகல் 3.30 மணி அளவில் தொடங்கி நடைபெற உள்ளது. வெள்ளி விமானத்தில் 63 நாயன்மார்களோடு இறைவன் வலம் வரும் காட்சியை காண, சென்னை, புறநகர் பகுதிகள் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மயிலாப்பூரில் குவிந்துள்ளனர். இன்று காலை முதலே மயிலாப்பூருக்கு பக்தர்கள் வரத் தொடங்கினார்கள். நேரம் செலச்செல்ல பக்தர்களின் வருகை அதிகரித்தது.

    மயிலாப்பூர் கோவிலில் இருந்து சில கிலோ மீட்டருக்கு பக்தர்கள் கூட்டமாகவே காட்சி அளித்தது. இதையொட்டி பக்தர்களுக்கு பல்வேறு இடங்களில் அன்னதானம், குளிர்பானம், பிஸ்கட், இனிப்பு வகைகள் உள்ளிட்டவை இன்று காலை முதலே வழங்கப்பட்டு வருகிறது. கோவிலை சுற்றியுள்ள தெற்கு மாடவீதி, வடக்கு மாட வீதி, கிழக்கு மாடவீதி, ராமகிருஷ்ண மடம் சாலை உள்ளிட்ட பல பகுதிகளில் பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் குளிர்பானங்கள் வழங்கப்பட்டன.

    மயிலாப்பூர் கோவிலுக்கு வந்த பக்தர்கள் அனைவருக்குமே ஒவ்வொரு பகுதியிலும் இந்த உணவு பொருட்கள் வழங்கப்பட்டன. இதனால் மயிலாப்பூர் பகுதியே பக்தர்கள் வெள்ளமாக காணப்பட்டது.

    மேலும் உணவு பொருட்களை சாப்பிடும் பக்தர்கள் குப்பைகளை சாலையில் வீசாமல் இருப்பதற்காக சாலையோரம் 340 குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 102 தொட்டிகள் 1,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மிகப்பெ ரிய தொட்டிகள் ஆகும்.

    பக்தர்கள் தாங்கள் சாப்பிட்ட உணவுப்பொருட்களின் குப்பைகளை இந்த தொட்டிகளில் போட்டனர். குப்பைகளை அப்புறப்படுத்துவதற்காக 10 பேட்டரி வாகனங்கள், 4 இலகு ரக மோட்டார் வாகனங்களும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.

    மேலும் பக்தர்கள் குப்பை களை தொட்டிகளில் போடுமாறு 100-க்கும் மேற்பட்ட மாண வர்கள், தன்னார்வலர்கள் விழிப்புணர்வில் ஈடுபட்டனர். 3 ஷிப்டுகளாக 269 தூய்மை பணியாளர்கள் குப்பைகளை அகற்றும் பணியிலும் ஈடுப டுத்தப்பட்டு உள்ளனர். மேலும் மயிலாப்பூரில் லட்சக்கணக்கான பகதர்கள் திரண்டதால் ஆயிரக்கணக்கான போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    Next Story
    ×