search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    467-வது கந்தூரி விழா: நாகூர் தர்காவில் கவர்னர் ஆர்.என்.ரவி பிரார்த்தனை
    X

    நாகூர் தர்காவில் கவர்னர் ஆர்.என்.ரவி பிரார்த்தனை செய்த காட்சி

    467-வது கந்தூரி விழா: நாகூர் தர்காவில் கவர்னர் ஆர்.என்.ரவி பிரார்த்தனை

    • மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் தர்காவில் 467-வது கந்தூரி விழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • கவர்னருக்கு எதிராக கருப்பு கொடிகளை காட்டி கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் நாகூரில் ஆண்டவர் தர்கா உள்ளது. மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாகவும் விளங்கும் இந்த தர்காவில் 467-வது கந்தூரி விழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தன கூடு ஊர்வலம் இன்று மாலை நாகையில் இருந்து புறப்படுகிறது. நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சந்தனகூடு ஊர்வலம் சென்று நாளை (ஞாயிற்றுகிழமை) அதிகாலை நாகூர் ஆண்டவருக்கு சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    இந்த நிலையில் கந்தூரி விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வந்தார்.

    பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்டு சாலை மார்க்கமாக நாகூர் தர்காவுக்கு சென்றார். அங்கு அவருக்கு மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்க்கீஸ் மற்றும் தர்கா நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் தர்காவுக்குள் சென்று பிரார்த்தனை செய்தார். அதன் பின்னர் அங்கிருந்து புறப்பட்டு திருச்சி சென்றார்.

    இந்த நிலையில் நீட் தேர்வில் விலக்கு உள்ளிட்ட தமிழக அரசு சட்டசபையில் நிறைவேற்றிய பல்வேறு தீர்மானங்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி கையெழுத்து போடாமல் கிடப்பில் போட்டுள்ளதை கண்டித்தும், அவரது வருகையை கண்டித்தும் நாகூர் அருகே கீழ்வேளூர் பகுதியில் மாவட்ட காங்கிரஸ் தலைவர் அமிர்தராஜா தலைமையில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தை, இந்திய கம்யூனிஸ்ட், திராவிட கழகம், மனிதநேய மக்கள் கட்சி, எஸ்.டி.பி.ஐ உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் கருப்பு கொடிகளுடன் திரண்டனர். அவர்களை போலீசார் பேரிகார்டு கொண்டு தடுத்தனர்.

    இருந்தாலும் கவர்னருக்கு எதிராக கருப்பு கொடிகளை காட்டி கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து போராட்டம் நடத்திய 100-க்கும் மேற்பட்டவர்களை கவர்னர் வருகைக்கு முன்பாகவே போலீசார் கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தி மண்டபத்தில் தங்க வைத்தனர். தொடர்ந்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×