search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் மே மாத டிக்கெட் முன்பதிவு நிறுத்தம்
    X

    கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் மே மாத டிக்கெட் முன்பதிவு நிறுத்தம்

    • தக்கல் டிக்கெட்டுகளை எடுப்பதற்காக ரெயில் நிலையங்களில் பல மணி நேரம் பலரும் காத்து இருந்து வருகிறார்கள்.
    • அனந்தபுரி எக்ஸ்பிரஸ், குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் மே மாதத்தில் பெரும்பாலான நாட்களுக்கான டிக்கெட் நிரம்பிவிட்டன.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் முக்கியமான ரெயில்களில் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலும் ஒன்றாகும்.

    கன்னியாகுமரியிலிருந்து 740 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சென்னைக்கு இந்த ரெயில் 12.30 மணி நேரத்தில் சென்றடையும். தினமும் கன்னியாகுமரியில் இருந்து மாலை 5.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலையில் 6.30 மணிக்கு சென்னை எக்மோர் ரெயில் நிலையத்தை சென்றடையும்.

    இதேபோல் சென்னை எக்மோர் ரெயில் நிலையத்திலிருந்து மாலை 5.20 மணிக்கு புறப்படும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் மறுநாள் காலையில் 5.35 மணிக்கு கன்னியாகுமரி ரெயில் நிலையத்தை வந்து அடையும். முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகள், ஏசி பெட்டிகள், முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் இந்த ரெயிலில் இணைக்கப்பட்டுள்ளது.

    சென்னையில் இருந்து கன்னியாகுமரி வருபவர்களும் கன்னியாகுமரியில் இருந்து சென்னை செல்பவர்களும் பெரும்பாலும் அதிகமானோர் இந்த ரெயிலில் பயணம் செய்து வருகிறார்கள். எனவே முன்பதிவு தொடங்கிய உடனே இந்த ரெயிலில் டிக்கெட்டுகள் நிரம்பிவிடும். தக்கல் டிக்கெட்டை பொறுத்தமட்டில் ரெயில் பயணத்தின் முந்தைய நாள் முன்பதிவு செய்யப்படும். தக்கல் டிக்கெட்டுகளை எடுப்பதற்காக ரெயில் நிலையங்களில் பல மணி நேரம் பலரும் காத்து இருந்து வருகிறார்கள். இதில் பெரும்பாலானோருக்கு டிக்கெட் கிடைக்காத நிலை உள்ளது.

    ஆன்லைன் மூலமாகவும் தக்கல் டிக்கெட் எடுப்பதற்கு பலரும் முயற்சி மேற்கொண்டும் ஒரு சிலருக்கு மட்டுமே டிக்கெட் கிடைக்கிறது. டிக்கெட் கிடைக்காதவர்கள் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் பயணம் செய்து வருகிறார்கள். தினமும் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் கூட்டம் அதிகமாக இருக்கும்.

    பண்டிகை காலங்கள் கோடை விடுமுறை தினங்களில் முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் கால் வைக்க முடியாத அளவிற்கு கூட்டம் நிரம்பி வழியும். கோடை விடுமுறையான மே மாதத்தில் முன்பதிவு செய்வதற்கு தற்பொழுது கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் பலரும் முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள். ஆனால் முன்பதிவு செய்ய முடியாத நிலை இருந்து வருகிறது.

    அனைத்து ரெயில்களிலும் மே மாதத்திற்கான முன்பதிவு தற்பொழுது நடைபெற்று வருகிறது. அனைத்து ரெயில்களிலும் டிக்கெட் எடுப்பதற்கு பொதுமக்கள் போட்டி போட்டு வருகிறார்கள். அனந்தபுரி எக்ஸ்பிரஸ், குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் மே மாதத்தில் பெரும்பாலான நாட்களுக்கான டிக்கெட் நிரம்பிவிட்டன.

    கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் மே 2-ந்தேதி வரை மட்டுமே முன்பதிவு செய்ய முடியும் நிலை உள்ளது. ஆனால் இன்றைய நிலவரப்படி மே 22-ந்தேதி வரை முன்பதிவு செய்ய ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு இருக்க வேண்டும்.

    மே 2-ந்தேதிக்கு பிறகு முன்பதிவு செய்ய முடியாத நிலை இருந்து வருகிறது. இதனால் ரெயில் பயணிகள் மிகவும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். ரெயில்வே நிர்வாகமும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் மே 2-ந்தேதிக்கு பிறகு ஏன் முன்பதிவு செய்ய முடியவில்லை என்ற விவரத்தை முறையாக தெரிவிக்கவில்லை.

    கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டிகளின் எண்ணிக்கை மாற்றப்பட இருப்பதால் முன்பதிவு வசதி வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் தற்போது இருக்கும் ஸ்லீப்பர் பெட்டிகளை குறைத்து ஏசி பெட்டிகளை அதிகரிக்கவும் தென்னக ரெயில்வே முயற்சி மேற்கொண்டு வருவதாலும் முன்பதிவு செய்யப்படாமல் உள்ளதாக கூறப்படுகிறது.

    பயணிகள் எந்த ஒரு குழப்பமும் இன்றி இருக்கும் வகையில் தென்னக ரெயில்வே கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் மே 2-ந்தேதிக்கு பிறகு ஏன் முன்பதிவு செய்யப்பட வில்லை என்ற முறையான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் ரெயில் பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×