search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கர்நாடகம் 14 டி.எம்.சி. தண்ணீரை திறந்து விட உத்தரவிட வேண்டும்- காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் தமிழக அதிகாரிகள் வலியுறுத்தல்
    X

    கர்நாடகம் 14 டி.எம்.சி. தண்ணீரை திறந்து விட உத்தரவிட வேண்டும்- காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் தமிழக அதிகாரிகள் வலியுறுத்தல்

    • பருவ மழை பெய்யும் காலமாக உள்ளதால் தண்ணீர் கிடைத்து விடும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.
    • காவிரி ஒழுங்காற்று குழுவின் 89-வது கூட்டம் தலைவர் வினித்குப்தா தலைமையில் இன்று காணொலியில் கூடியது.

    சென்னை:

    காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பிக்கும் உத்தரவை கர்நாடக அரசு மதிக்காமல் தமிழகத்திற்கு தேவையான தண்ணீரை திறந்து விட மறுத்து வருகிறது. குறிப்பிட்ட அளவுக்கும் குறைவாகவே மேட்டூர் அணைக்கு தண்ணீர் வருகிறது.

    இது தொடர்பாக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டு வரை சென்று போராடியது. இருப்பினும் கர்நாடக அரசு தொடர்ந்து பிடிவாதம் காட்டி வருகிறது. இதன் காரணமாக டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் வீணாகி விட்டன. ஆனாலும் மீண்டும் விவசாயிகள் நெற்பயிரிட்டு உள்ளனர்.

    தற்போது பருவ மழை பெய்யும் காலமாக உள்ளதால் தண்ணீர் கிடைத்து விடும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.

    இந்நிலையில் காவிரி ஒழுங்காற்று குழுவின் 89-வது கூட்டம் தலைவர் வினித்குப்தா தலைமையில் இன்று காணொலியில் கூடியது.

    இந்த கூட்டத்தில் தமிழக நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில் நுட்ப குழு தலைவர் சுப்பிரமணியன், தலைமைப் பொறியாளர் சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்றனர். இதே போல் கர்நாடகா, கேரளா, புதுச்சேரி அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் தமிழகத்திற்கு கர்நாடக அரசு இதுவரை திறந்து விட வேண்டிய நிலுவை 14 டி.எம்.சி. தண்ணீரை உடனடியாக கிடைக்க உத்தரவிட வேண்டும் என்றும் அதிகாரிகள் வலியுறுத்தினார்கள்.

    கர்நாடக மாநில அணைகளில் 50 டி.எம்.சி.க்கும் மேல் தண்ணீர் இருப்பதால் வினாடிக்கு 13 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொண்டனர். ஆனாலும் இதை கர்நாடக அதிகாரிகள் ஏற்றுக் கொள்ளவில்லை. பருவ மழை பெய்வதை பொறுத்து தான் முடிவெடுக்க இயலும் என்று தெரிவித்துவிட்டனர்.

    Next Story
    ×