search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கர்நாடகாவில் முழு அடைப்பு எதிரொலி: பண்ணாரி சோதனை சாவடியில் வாகனங்கள் தடுத்து நிறுத்தம்
    X

    பண்ணாரி சோதனைச்சாவடியில் நீண்ட வரிசையில் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளதை காணலாம். 

    கர்நாடகாவில் முழு அடைப்பு எதிரொலி: பண்ணாரி சோதனை சாவடியில் வாகனங்கள் தடுத்து நிறுத்தம்

    • சத்தியமங்கலத்தில் இருந்து தாளவாடி செல்லும் வாகன ஓட்டிகள் தலமலை வனச்சாலையை பயன்படுத்தி கொள்ளுமாறு போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.
    • கர்நாடகாவுக்கு சென்ற சரக்கு வாகனங்களும் தமிழக எல்லையான பண்ணாரி, புளிஞ்சூர் சோதனை சாவடிகள் வரை மட்டுமே சென்றன.

    சத்தியமங்கலம்:

    தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக மாநிலத்தில் உள்ள கன்னட அமைப்புகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 26-ந் தேதி பெங்களூருவில் மட்டும் முழு அடைப்பு போராட்டம் நடந்தது. அன்றைய தினம் தமிழகத்தில் இருந்து கர்நாடகா செல்லும் பஸ்கள் நிறுத்தப்பட்டிருந்தன.

    அதன்படி சத்தியமங்கலம், தாளவாடி, அந்தியூர் பகுதியில் இருந்து கர்நாடக செல்லும் பஸ்கள் நிறுத்தப்பட்டிருந்தன. இதேபோல் சரக்கு வாகனங்களும் நிறுத்தப்பட்டிருந்தன. இந்நிலையில் கர்நாடக மாநிலம் முழுவதும் இன்று ஒரு நாள் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என கன்னட அமைப்புகள் அறிவித்து இருந்தன. அதன்படி இன்று முழு அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது.

    இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக-கர்நாடக எல்லைப் பகுதியான தாளவாடி அடுத்த ராமாபுரம், கும்டாபுரம், பாரதிபுரம் எடத்திகட்டை, அருள்வாடி, காரப்பள்ளம், கேர்மாளம் ஆகிய மாநில எல்லையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தமிழக பதிவு எண் கொண்ட வாகனங்கள் இன்று காலை 6 மணி முதல் கர்நாடகாவில் நுழைய போலீசார் தடை விதித்துள்ளனர்.

    சத்தியமங்கலத்தில் இருந்து தாளவாடி செல்லும் வாகன ஓட்டிகள் தலமலை வனச்சாலையை பயன்படுத்தி கொள்ளுமாறு போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர். முழு அடைப்பு போராட்டத்தையொட்டி ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூரு, மைசூரு, சாம்ராஜ்நகர் மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு பண்ணாரி தாளவாடி வழியாக தினமும் இயக்கப்பட்டு வந்த 9 தமிழக அரசு பஸ்கள் இன்று சத்தியமங்கலம் பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் கர்நாடகாவுக்கு செல்ல வந்த பயணிகள் தவிப்புக்கு உள்ளாகினர்.

    அதேபோல் கர்நாடகாவுக்கு சென்ற சரக்கு வாகனங்களும் தமிழக எல்லையான பண்ணாரி, புளிஞ்சூர் சோதனை சாவடிகள் வரை மட்டுமே சென்றன. அங்கு வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. இதனால் பண்ணாரி சோதனைச்சாவடி மற்றும் புளிஞ்சூர் சோதனை சாவடியில் சாலையின் இருபுறமும் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.

    இதேபோல் அந்தியூர் மற்றும் பர்கூர் வழியாக வரட்டுபள்ளம் சோதனை சாவடி, பர்கூர் போலீஸ் நிலைய சாவடி, கர்கே கண்டி ஆகிய பகுதிகளிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அந்தியூரில் இருந்து மைசூருசெல்லும் பஸ்களும் நிறுத்தப்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவின் பெயரில் கர்நாடகா-தமிழக எல்லை பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    Next Story
    ×