search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்க ராமேசுவரத்தில் இருந்து பெண்கள் உள்பட 2400 பேர் பயணம்

    • கச்சத்தீவுக்கு புறப்பட்டவர்களின் அடையாள அட்டை, ஆவணங்களை மாவட்ட அதிகாரிகள், போலீசார் சரிபார்த்தனர்.
    • கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா இன்று மாலை தொடங்குகிறது.

    ராமேசுவரம்:

    இந்தியாவின் தென் எல்லையான ராமேசுவரம் தீவிலிருந்து 22 நாட்டிங்கல் மைல் தொலைவில் மன்னார் வளைகுடா கடலில் இந்திய-இலங்கை எல்லையையொட்டி கச்சத்தீவு அமைந்துள்ளது. 1974-ம் ஆண்டு வரை இந்தியாவுக்கு சொந்தமாக இருந்த இந்த தீவு பின்னர் இலங்கையுடன் ஏற்பட்ட ஒப்பந்தம் காரணமாக கைமாறியது.

    இந்த தீவில் பிரசித்தி பெற்ற புனித அந்தோணியார் தேவாலயம் உள்ளது. இங்கு வருடம் தோறும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் திருவிழா நடக்கும். 2 நாட்கள் நடக்கும் இந்த விழாவில் இந்திய-இலங்கையை சேர்ந்த 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள். விழாவில் இரு நாட்டு மக்களும் சகோதரத்துவத்துடன் சந்தித்து தாங்கள் கொண்டு வந்த பொருட்களை பரிமாற்றம் செய்வது வழக்கம்.

    கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்களின்றி கச்சத்தீவு திருவிழா எளிமையாக நடைபெற்றது. இதனால் தமிழகத்தில் இருந்து மறை மாவட்ட பாதிரியார்கள் மட்டும் பங்கேற்றனர்.

    இந்த ஆண்டு கொரோனா பரவல் குறைந்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் கச்சத்தீவு திருவிழாவை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாட இருநாட்டு மறைமாவட்ட பாதிரியார்கள் முடிவு செய்தனர். இதற்கான ஏற்பாடுகள் கடந்த 2 மாதங்களாக நடைபெற்றது.

    கச்சத்தீவு திருவிழாவில் தமிழகத்தில் இருந்து பங்கேற்க விரும்புவோர் விபரங்களை ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் சேகரித்தது. அதன்படி கச்சத்தீவு திருவிழாவில் பெண்கள், குழந்தைகள் உள்பட 2 ஆயிரத்து 408 பேர் செல்ல பதிவு செய்திருந்தனர்.

    கச்சத்தீவு திருவிழா இன்று (3-ந் தேதி) மாலை கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. இதையொட்டி ராமேசுவரத்தில் இருந்து பக்தர்கள் இன்று காலை 7 மணி முதல் புறப்பட்டு சென்றனர். ராமேசுவரம் துறைமுகத்தில் இதற்கான ஏற்பாடுகள் விரிவாக செய்யப்பட்டிருந்தன. 60 விசைப்படகுகள், 12 நாட்டு படகுகள் என மொத்தம் 72 படகுகளில் 2408 பேர் இன்று காலை முதல் கச்சத்தீவுக்கு சென்றனர்.

    இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் பக்தர்களின் கச்சத்தீவு பயணத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    முன்னதாக கச்சத்தீவுக்கு புறப்பட்டவர்களின் அடையாள அட்டை, ஆவணங்களை மாவட்ட அதிகாரிகள், போலீசார் சரிபார்த்தனர். தொடர்ந்து அவர்களுக்கு பாதுகாப்பு கவச உடை (லைப் ஜாக்கெட்) வழங்கப்பட்டது. பக்தர்களின் உடைமைகள் சோதனை செய்யப்பட்டன.

    மது பாட்டில்கள், பாலிதீன் பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. குறிப்பிட்ட அளவு இந்திய பணம் மற்றும் திண்பண்டங்கள் போன்றவை கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டன.

    ஒவ்வொரு படகுகளில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் பக்தர்கள் ஏற்றப்பட்டன. படகுகளில் ஏறிய அவர்கள் உற்சாகத்துடன் கச்சத்தீவுக்கு புறப்பட்டு சென்றனர். இன்று பிற்பகலுக்குள் அனைத்து படகுகளும் கச்சத்தீவுக்கு செல்லும் என தெரிவிக்கிறது.

    கச்சத்தீவு திருவிழாவையொட்டி இந்திய கடல் எல்லையில் கடற்படை, கடலோர காவல் படையினர், உளவுத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதேபோல் கச்சத்தீவு மற்றும் இலங்கை கடல் எல்லையிலும் அந்நாட்டு கடற்படை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டது.

    கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா இன்று மாலை 4.30 மணிக்கு தொடங்குகிறது. அப்போது அந்தோணியார் உருவம் பதித்த கொடியை நெடுந்தீவு பங்குசந்தை எமலிபால் ஏற்றி வைக்கிறார். தொடர்ந்து சிலுவை பாதை திருப்பலி நடைபெறுகிறது. இரவு அந்தோணியார் தேர்பவனி நிகழ்ச்சி நடக்கிறது. 2-ம் நாளான நாளை (சனிக்கிழமை) யாழ்பாணம் மறை மாவட்ட ஆயர் ஜஸ்டன் ஞானபிரகாசம் தலைமையில் சிறப்பு திருப்பலியோடு விழா நிறைவு பெறுகிறது.

    அதனை தொடர்ந்து கொடியிறக்கம் நடக்கிறது. விழா முடிந்த பின் இந்திய பக்தர்கள் நாடு திரும்புகிறார்கள். கச்சத்தீவு திருவிழாவை முன்னிட்டு ராமேசுவரம் கடல் பகுதியில் வருகிற 5-ந் தேதி வரை மீன்பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஏராளமான படகுகள் கடலுக்கு செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    Next Story
    ×