search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கொடநாடு வழக்கை காட்டி பூச்சாண்டி காட்ட வேண்டாம்- ஆர்.எஸ்.பாரதிக்கு ஜெயக்குமார் கண்டனம்
    X

    ஆர்.எஸ்.பாரதி, ஜெயக்குமார்

    கொடநாடு வழக்கை காட்டி பூச்சாண்டி காட்ட வேண்டாம்- ஆர்.எஸ்.பாரதிக்கு ஜெயக்குமார் கண்டனம்

    • வார்த்தைகளை அளந்து பேச வேணடும் என ஆர்.எஸ்.பாரதிக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்
    • மடியில் கனம் இல்லையென்றால் வழியில் பயப்படவேண்டிய அவசியம் கிடையாது

    சென்னை:

    கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமியின் பினாமி விசாரிக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் அவரின் உண்மைகள் வெளிவரும் என்று ஆர்.எஸ்.பாரதி கூறினார்.

    இந்நிலையில், சென்னை பட்டினப்பாக்கம் இல்லத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஆர்.எஸ்.பாரதியின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். ஜெயக்குமார் மேலும் கூறியதாவது:-

    வார்த்தைகளை அளந்து பேச வேணடும். நீங்கள் ஒரு வார்த்தை பேசினால், நாங்கள் 100 வார்த்தை பேசுவோம். வார்த்தைகளை எப்படி பிரயோகிக்கவேண்டும், எந்த நேரத்தில் பிரயோகிக்க வேண்டும், யார் மீது பிரயோகிக்க வேண்டும் என அனைத்து வித்தைகளும் எங்களுக்குத் தெரியும். ஆனால் அரசியல் பண்பாடு கருதி அப்படி பேசவில்லை.

    அரசியல் ரீதியாக வந்து விமர்சனம் செய்யுங்கள், நாங்கள் பதில் கொடுக்கிறோம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை திருப்திப்படுத்தி பதவி வாங்குவதற்கு நாங்கள்தான் கிடைத்தோமா? ஏற்றுக்கொள்ள முடியாத வார்த்தைகளை பயன்படுத்தி அதிமுகவுக்கும், அண்ணன் எடப்பாடியாருக்கும் களங்கம் ஏற்படுத்தும் விஷயத்தில் ஈடுபட்டால் தகுந்த பதிலடி அவ்வப்போது கொடுப்போம்.

    கொடநாடு வழக்கை சட்டப்படி சந்திப்போம். மடியில் கனம் இல்லையென்றால் வழியில் பயப்படவேண்டிய அவசியம் கிடையாது. சும்மா கொடநாடு வழக்கை பயன்படுத்தி பூச்சாண்டி காட்டவேண்டாம். இதுபோல் எத்தனையோ பூச்சாண்டி வேலைகளையெல்லாம் திமுக காலத்தில் அப்போதே பார்த்து பழக்கப்பட்டவர்கள் நாங்கள். இதற்கு பயப்படும் கட்சி அதிமுக அல்ல.

    இவ்வாறு ஜெயக்குமார் கூறினார்.

    Next Story
    ×