search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பாராளுமன்ற தேர்தலில் கொங்குநாடு முன்னேற்ற கழகம் பா.ஜ.க.வுக்கு நிபந்தனையற்ற ஆதரவு
    X

    பாராளுமன்ற தேர்தலில் கொங்குநாடு முன்னேற்ற கழகம் பா.ஜ.க.வுக்கு நிபந்தனையற்ற ஆதரவு

    • ஆற்றல் மிகுந்த பிரதமராக நரேந்திர மோடி திகழ்கிறார்.
    • இந்த தேர்தலில் நாங்கள் போட்டியிடவில்லை. 2026 சட்டசபை தேர்தலில் போட்டியிடுவோம்.

    கோவை:

    கொங்குநாடு முன்னேற்ற கழக மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கோவையில் நடந்தது. கூட்டத்துக்கு அந்த கட்சியின் நிறுவன தலைவர் பெஸ்ட் ராமசாமி தலைமை தாங்கினார்.

    இந்த கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு கொங்குநாடு முன்னேற்ற கழகம் நிபந்தனையற்ற ஆதரவு தெரிவிப்பது என முடிவு செய்யப்பட்டது.

    இதுதொடர்பாக பெஸ்ட் ராமசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    கடந்த 10 ஆண்டுகளில் நாடு வளர்ச்சி அடைந்துள்ளது. அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு உள்ளன. ஆற்றல் மிகுந்த பிரதமராக நரேந்திர மோடி திகழ்கிறார். அவர் மீண்டும் பிரதமரானால் ஊழல் இன்றி விவசாயிகள், ஏழை-எளிய மக்களுக்கு வேண்டிய உதவிகளை செய்வார்.

    உலகில் ஒரு வலுவான நாடாக இந்தியா மாறியுள்ளது. பேச்சுத்திறனும், உலகம் போற்றும் தலைவராகவும் மோடி உள்ளார். இந்தியாவை உலக நாடுகள் வியப்புடன் பார்க்கின்றன. அதனால் வருகிற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு கொங்குநாடு முன்னேற்ற கழகம் நிபந்தனையற்ற ஆதரவு தெரிவிக்கிறது.

    இந்த தேர்தலில் நாங்கள் போட்டியிடவில்லை. 2026 சட்டசபை தேர்தலில் போட்டியிடுவோம். பாராளுமன்ற தேர்தல்களில் தமிழகத்தில் மாறி, மாறி வெற்றி பெற்ற அ.தி.மு.க., தி.மு.க. உறுப்பினர்கள் மாநில வளர்ச்சிக்காக எதுவும் செய்யவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கோவை விமான நிலையத்துக்கு தீரன் சின்னமலை பெயர் சூட்ட வேண்டும், மெட்ரோ ரெயில் திட்டத்தை திருப்பூர் வரை நீட்டிக்க வேண்டும், ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெயை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

    Next Story
    ×