search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    10 நாட்களாகியும் கூண்டில் சிக்காமல் வனத்துறையினருக்கு போக்கு காட்டும் சிறுத்தை- பொதுமக்கள் அச்சம்
    X

    10 நாட்களாகியும் கூண்டில் சிக்காமல் வனத்துறையினருக்கு போக்கு காட்டும் சிறுத்தை- பொதுமக்கள் அச்சம்

    • சிறுத்தையை பிடிக்க 3 இடங்களில் கூண்டு வைக்கப்பட்டுள்ளது.
    • விவசாயி ஒருவர் சிறுத்தை வாயில் நாயை கொன்று கவ்வியபடி இருப்பதை பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போனார்.

    காங்கயம்:

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே ஊதியூர் மலைப்பகுதியில் கடந்த 10 நாட்களாக பதுங்கி இருக்கும் சிறுத்தை ஆடு, மாடு, நாய்களை வேட்டையாடி வருகிறது. சிறுத்தையை பிடிக்க 3 இடங்களில் கூண்டு வைக்கப்பட்டுள்ளது. அந்த கூண்டுக்குள் ஆடுகள் கட்டப்பட்டுள்ளன. ஆனாலும் சிறுத்தை கூண்டுக்குள் சிக்காமல் போக்கு காட்டி வருகிறது.

    இதையடுத்து மலையை சுற்றி தானியங்கி கேமராக்கள் பொருத்தி வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். ஆனால் இதுவரை சிறுத்தையின் நடமாட்டம் கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகவில்லை. ஆனால் பொதுமக்கள் சிலர் சிறுத்தையை பார்த்ததாக தெரிவித்து வந்தனர்.

    எனவே டிரோன் கேமரா வரவழைக்கப்பட்டு அதன் மூலம் சிறுத்தை எங்கு உள்ளது என்று கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த முயற்சியிலும் சிறுத்தை தென்படவில்லை. இருப்பினும் தொடர்ந்து பல்வேறு குழுக்களாக பிரிந்து வனப்பகுதி மற்றும் மலையடிவார பகுதி என அனைத்து இடங்களிலும் சிறுத்தையை தேடி வருகின்றனர்.

    இந்நிலையில் காசிலிங்கம்பாளையம் பகுதியில் விவசாயி ஒருவர் தனது தோட்டத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த நாய்க்கு உணவு வைப்பதற்காக சென்றுள்ளார். அங்கு கட்டியிருந்த நாயை காணவில்லை. அருகில் தேடி பார்த்தார். அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு பாறை மீது சிறுத்தை நின்றதையும், அந்த சிறுத்தை வாயில் நாயை கொன்று கவ்வியபடி இருப்பதையும் பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போனார். உடனடியாக அப்பகுதியை விட்டு தப்பி ஓடினார். இதையடுத்து காங்கயம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே வனத்துறையினர் வருவதற்குள் சிறுத்தை அங்கிருந்து ஓடிவிட்டது.

    10 நாட்களாகியும் சிறுத்தை சிக்காமல் வனத்துறையினருக்கு போக்கு காட்டி வருகிறது. சிறுத்தை சிக்காததால் பொது மக்கள் வெளியே செல்ல பயந்து வீடுகளுக்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வனத்துறையினர் ஊதியூர் பகுதியில் இரவு-பகலாக கண்காணித்து வருகின்றனர். சிறுத்தை தொடர்ந்து அட்டகாசம் செய்வதால் உடனே அதனை பிடிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×