என் மலர்
தமிழ்நாடு
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 4-வது நாளாக தொடர் உண்ணாவிரதம்: குழந்தை உள்பட 3 பேர் மயக்கம்
- 50-க்கும் மேற்பட்டவர்கள் 4-வது நாளாக குடும்பத்துடன் உன்னாவிரதம் இருந்து வருகின்றனர்.
- சிறுமி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
மேட்டூர்:
மேட்டூர் காவிரி- சரபங்கா உபரி நீர் திட்டம் மூலம் வறண்ட 116 ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்வதற்காக விவசாய நிலத்தில் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆதி திராவிட மக்கள் வசிக்கும் சூரப்பள்ளி, குப்பம்பட்டி, ஜலகண்டாபுரம் பெரிய கிணறு பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதியில் தற்போது கால்வாய் அமைக்கும் பணி தொடங்கி உள்ளதால் அந்த பகுதியில் விவசாய நிலங்கள், வீடுகள் பாதிக்கும் என்றும், இந்த திட்டத்தை மாற்று நீர் வழிப்பாதையில் அமைக்க வேண்டும் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், பொதுமக்கள் ஜலகண்டாபுரத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் 50-க்கும் மேற்பட்டவர்கள் 4-வது நாளாக குடும்பத்துடன் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட 5 வயது குழந்தை உள்பட குப்பம்பட்டியை சேர்ந்த பாக்கியம் (வயது 53), லோகாம்மாள் (65) ஆகியோர் நேற்று மயக்கம் அடைந்தனர். இதில் சிறுமி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். பாக்கியம், லோகாம்மாள் ஆகியோர் ஜலகண்டாபுரம் அரசு மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து கட்சி நிர்வாகிகள் கூறுகையில் இந்த உண்ணாவிரத போராட்டம் 4-வது நாளாக நடைபெற்று வருகிறது. தமிழக அரசு எங்கள் கோரிக்கையை ஏற்று இந்த காவிரி- சரபங்கா உபரி நீர் திட்டத்தை குடியிருப்பு பகுதியில் அமுல்படுத்தாமல் மாற்று நீர் ஓடை வழியாக கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.