search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தவறான சிகிச்சையால் நிரந்தர பாதிப்பு- இலங்கை பெண்ணுக்கு ரூ.40 லட்சம் இழப்பீடு வழங்க ஜி.ஜி. ஆஸ்பத்திரிக்கு உத்தரவு
    X

    தவறான சிகிச்சையால் நிரந்தர பாதிப்பு- இலங்கை பெண்ணுக்கு ரூ.40 லட்சம் இழப்பீடு வழங்க ஜி.ஜி. ஆஸ்பத்திரிக்கு உத்தரவு

    • 2013-ம் ஆண்டு மே 15-ந் தேதி அறுவைசிகிச்சை நடந்தது. அதன்பின்னர் எனக்கு மூச்சுத்திணறல், வாந்தி, தாங்கமுடியாத வயிற்றுவலி ஏற்பட்டன.
    • என்னைப் பரிசோதித்த டாக்டர்கள், அறுவைசிகிச்சையில் தவறு நடந்துள்ளதாகவும், பெருங்குடலில் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறினர்.

    சென்னை:

    பிரான்ஸ் நாட்டில் வசித்து வருபவர் புளோரா. இலங்கை தமிழரான இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஜி.ஜி. ஆஸ்பத்திரி கருத்தரிப்பு சிகிச்சையில் நிபுணத்துவம் பெற்றது என்று கூறப்பட்டதால், அங்கு சிகிச்சைக்காக சென்றேன். என்னைப் பரிசோதித்த டாக்டர்கள், கருப்பையில் கட்டி உள்ளதாக கூறி அதை அறுவைசிகிச்சை மூலம் அகற்ற வேண்டும் என்றனர்.

    அதன்படி எனக்கு 2013-ம் ஆண்டு மே 15-ந் தேதி அறுவைசிகிச்சை நடந்தது. அதன்பின்னர் எனக்கு மூச்சுத்திணறல், வாந்தி, தாங்கமுடியாத வயிற்றுவலி ஏற்பட்டன. அங்கிருந்த நர்சு மூலம் டாக்டர்கள் செல்வராஜ், கமலா செல்வராஜ் ஆகியோர், இவையெல்லாம் சிகிச்சைக்கு பின்னர் வழக்கமாக ஏற்படும் நிகழ்வுகள்தான் என்று கூறிவிட்டனர்.

    என்னால் வலியைத் தாங்கமுடியாமல் துடித்தபோது, என்னைப் பரிசோதித்த டாக்டர்கள் எந்த ஒரு ஒப்புதலையும் பெறாமல் 2-வது அறுவைசிகிச்சையை மேற்கொண்டனர். பின்னர், என்னை அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு இடம்மாற்றினர். அங்கு என்னைப் பரிசோதித்த டாக்டர்கள், அறுவைசிகிச்சையில் தவறு நடந்துள்ளதாகவும், பெருங்குடலில் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறினர். அதன்பின்னர் 3-வது அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. அப்போது என் சகோதரரிடம் ஜி.ஜி. ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் ரூ.5 லட்சம் தருவதாகவும், இந்த பிரச்சினையை வெளியில் சொல்ல வேண்டாம் என்றும் சமரசம் பேசினர். அதை நாங்கள் ஏற்கவில்லை. தவறான அறுவைசிகிச்சையால், சுமார் 37 நாட்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு பல லட்சம் ரூபாய் செலவு செய்து, உயிரைக் காப்பாற்ற போராடியுள்ளேன்.

    கடுமையான மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளேன். எனவே எனக்கு ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க ஜி.ஜி. ஆஸ்பத்திரி நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கோரியிருந்தார்.

    இந்த வழக்கை நீதிபதி ஜி.சந்திரசேகரன் விசாரித்தார். அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், 'தவறான அறுவைசிகிச்சையால் மனுதாரரின் பெருங்குடல் நிரந்தரமாக பாதிக்கப்பட்டுள்ளது. அவர் மலத்தை வெளியேற்ற வயிற்றுக்கு மேல் பை ஒன்று நிரந்தரமாக பொருத்தப்பட்டுள்ளது. அதன் வழியாகத்தான் மலம் கழிக்க வேண்டும். இதனால் அவரால் பிறருடன் பழக முடியவில்லை. பார்த்துக்கொண்டிருந்த வேலையையும் இழந்துள்ளார். பிறர் உதவி இல்லாமல் வாழமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். இதனால் அவர் சொல்ல முடியாத அளவுக்கு மனவேதனையில் வாழ்ந்துவருகிறார். எனவே, உரிய இழப்பீட்டை அவருக்கு வழங்க உத்தரவிட வேண்டும்' என்று வாதிட்டார்.

    அதற்கு மறுப்பு தெரிவித்து ஆஸ்பத்திரி நிர்வாகம் சார்பில் வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி பிறப்பித்த தீர்ப்பில், 'தவறான சிகிச்சையால் மனுதாரர் நிரந்தரமாக பாதிக்கப்பட்டுள்ளார். அவர் வழக்கமான, அன்றாட வாழ்க்கையை வாழமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். எனவே அவருக்கு இழப்பீடாக ரூ.40 லட்சத்தை 12 சதவீத வட்டியுடன் ஜி.ஜி. ஆஸ்பத்திரி நிர்வாகம் வழங்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.

    Next Story
    ×