search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    செந்தில்பாலாஜி வாக்குமூலம் கொடுத்தால் பலர் சிக்குவார்கள்- எடப்பாடி பழனிசாமி
    X

    செந்தில்பாலாஜி வாக்குமூலம் கொடுத்தால் பலர் சிக்குவார்கள்- எடப்பாடி பழனிசாமி

    • தமிழத்தை காப்பாற்ற முடியாத ஸ்டாலின், பீகார் சென்று சர்வகட்சி தலைவர்களுடன் சேர்ந்து பிரதமரை உருவாக்குகிறாராம்.
    • மதுபான பார்கள் மூலம் ஒரு நாளுக்கு ரூ.10 கோடி என ஆண்டுக்கு ரூ.3,600 கோடி ஊழல் செய்துள்ளனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட சூரப்பள்ளி, சவுரியூர், காப்பரத்தாம்பட்டி, கரிக்காப்பட்டி பகுதிகளில் அ.தி.மு.க பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கட்சியை கொடியை ஏற்றி வைத்தார்.

    பின்னர் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது: -

    தி.மு.க ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, அ.தி.மு.க கொண்டு வந்த ஒவ்வொரு திட்டத்தையும் ரத்து செய்கின்ற காட்சியைத்தான் சாதனையாக பார்க்கிறோம்.

    தமிழகத்தில் மின் கட்டணம் 52 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் கைத்தறி, விசைத்தறி, உள்ளிட்ட தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்படுகின்றன. தமிழத்தை காப்பாற்ற முடியாத முதலமைச்சர் ஸ்டாலின், பீகார் சென்று சர்வகட்சி தலைவர்களுடன் சேர்ந்து பிரதமரை உருவாக்குகிறாராம்.

    நான் முதலமைச்சராக இருந்தபோது, உங்கள் மீது வழக்கு போட்டிருக்க முடியும். ஆனால் வழக்கு போடவில்லை.

    மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் தான் மனதில் இருந்தது. 4ஆண்டுகள் சிறப்பான ஆட்சி தந்தோம். பொது இடத்தில் கூட்டம் போட்டு எங்கள் ஆட்சி மீதுள்ள குற்றச்சாட்டை சொல்லுங்கள், அதற்கு நான் பதில் தருகிறேன்.

    கைதான அமைச்சர் செந்தில்பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும். தமிழகத்தில் மதுபான பார்கள் மூலம் ஒரு நாளுக்கு ரூ.10 கோடி என ஆண்டுக்கு ரூ.3,600 கோடி ஊழல் செய்துள்ளனர். இதற்கு தான் மத்திய அரசு ரெய்டு நடத்துகிறது. செந்தில் பாலாஜி வாக்குமூலம் கொடுத்துவிட்டால், பலர் சிக்குவார்கள்.

    இவ்வாறு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

    Next Story
    ×