search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    மெரினா நீச்சல் குளம் ஓரிரு நாட்களில் திறப்பு- மாநகராட்சி அதிகாரி தகவல்
    X

    மெரினா நீச்சல் குளம் ஓரிரு நாட்களில் திறப்பு- மாநகராட்சி அதிகாரி தகவல்

    • மெரினா நீச்சல் குளம் பராமரிப்பின்றி கிடந்தது.
    • குளத்தை சுற்றி வண்ண விளக்குகள் கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டின் கீழ் மெரினா மற்றும் பெரியமேடு மை லேடி பூங்கா ஆகிய இடங்களில் நீச்சல் குளங்கள் உள்ளன. இதில், மெரினா நீச்சல் குளம் 3½ முதல் 5 அடி வரை ஆழம் கொண்டது. மெரினா நீச்சல் குளத்தை முதலில் மாநகராட்சி பராமரித்து வந்தது. பின்னர், ஒப்பந்த அடிப்படையில் பராமரிப்பு பணி தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டது.

    இங்கு ஒரு மணி நேரத்துக்கு ரூ.50 கட்டணம் என்ற அடிப்படையில் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். இதற்கிடையே, நீச்சல் குளத்தை தனியார் முறையாக பராமரிக்காததால் சுகாதாரமற்று இருப்பதாக புகார்கள் எழுந்தது. இதேபோல, கடந்த ஆண்டு பெரியமேட்டில் உள்ள உள்ள நீச்சல் குளத்தில் மூழ்கி 8 வயது சிறுவன் உயிரிழந்தான். இதன் காரணமாக நீச்சல் குளங்களில் பொதுமக்கள் நீச்சல் பயிற்சிக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால், மெரினா நீச்சல் குளம் பராமரிப்பின்றி கிடந்தது.

    இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, மெரினா நீச்சல் குளத்தை பார்வையிட்டார். அப்போது, நீச்சல் குளத்தை முறையாக பராமரித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர அறிவுறுத்தினார். அதைதொடர்ந்து, நீச்சல் குளம் சீரமைப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. நீச்சல் குளத்தில், சுத்தமான தண்ணீர் தடையின்றி வருவதற்கான ஏற்பாடுகள், நீச்சல் பயிற்சி மேற்கொள்பவர்களுக்கு வசதிகள், கழிவறை, உடை மாற்றும் அறைகள் அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளது.

    நீச்சல் குளத்தை சுற்றியுள்ள உள்புற பகுதிகளில் கண்கவர் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது. மின் விளக்கு வசதி, குடிநீர் வசதி, கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், மெரினா நீச்சல் குளம் ஓரிரு நாட்களில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    சென்னை மெரினா கடற்கரையில் உள்ள நீச்சல் குளத்தில் சீரமைப்பு பணிகள் நிறைவடைந்துள்ளது. எஞ்சிய பணிகள் மட்டுமே நடைபெற்று வருகிறது. அந்த பணிகள் திங்கட்கிழமை (அதாவது இன்று) முடிவடைந்துவிடும். குளத்தை சுற்றி வண்ண விளக்குகள் கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது.

    எனவே, நாளை (24-ந்தேதி) அல்லது நாளை மறுநாள் (25-ந்தேதி) நீச்சல் குளம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். நீச்சல் குளத்தை மாநகராட்சியே பராமரிக்க உள்ளது. நீச்சல் போட்டிகள் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×