search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    எம்.பி.பி.எஸ். தரவரிசை பட்டியல் ஆகஸ்ட் 19-ந்தேதி வெளியிடப்படும்- அமைச்சர் பேட்டி
    X

    எம்.பி.பி.எஸ். தரவரிசை பட்டியல் ஆகஸ்ட் 19-ந்தேதி வெளியிடப்படும்- அமைச்சர் பேட்டி

    • 6 தனியார் மருத்துவ கல்லூரிகள் புதிதாக தொடங்க தேசிய மருத்துவ ஆணையத்திடம் அனுமதி கேட்டுள்ளனர்.
    • ஆன்லைன் வழியாக பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடங்கப்படும்.

    சென்னை:

    அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்தப்படுகிறது.

    இந்த ஆண்டு நீட்தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் முறை கேட்டால் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு கால தாமதம் ஆகியுள்ளது.

    இந்த நிலையில் நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகள் மருத்துவ படிப்பில் சேருவதற்கு ஆவலுடன் காத்திருந்த நிலையில் கலந்தாய்வு தள்ளிப் போகிறது. அகில இந்திய ஒதுக்கீட்டு மருத்துவ இடங்களுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 1-ந் தேதி தொடங்கும் என்று மத்திய மருத்துவ ஆணையம் அறிவித்ததை தொடர்ந்து தமிழக அரசு, மாநில இடங்களுக்கான கலந்தாய்வை தொடங்க முடிவு செய்தது. அதன்படி ஆகஸ்ட் 21-ந் தேதி பொது கலந்தாய்வு தொடங்குகிறது.

    இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் 2024-25-ம் ஆண்டிற்கான மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்பம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. ஆகஸ்ட் 8-ந்தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். ஆவணங்களை பதிவேற்றம் செய்யலாம். அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் 15 சதவீதம் போக மீதமுள்ள 85 சதவீத இடங்களுக்கு மருத்துவ கலந்தாய்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.


    ஆகஸ்ட் 21-ந்தேதி முதல் கட்ட கலந்தாய்வு தொடங்குகிறது. தமிழ்நாடு மருத்துவ தேர்வு குழு மூலமாக நடத்தப்படும் கலந்தாய்விற்கான மெரிட் லிஸ்ட் ஆகஸ்ட் 19 -ந்தேதி வெளியிடப்படும். 21-ந்தேதி ஆன்லைன் வழியாக பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடங்கப்படும்.

    22 மற்றும் 23-ந் தேதிகளில் 7.5 சதவீத அரசு பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு ஒதுக்கீடு மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்கள், முன்னாள் ராணுவத்தினர், விளையாட்டு வீரர்கள் என 4 வகை சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறும்.

    சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நேரடியாக நடத்தப்படும். எந்த இடத்தில் நடக்கும் என்ற விவரம் பின்னர் தெரிவிக்கப்படும். தமிழ்நாட்டில உள்ள 36 அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் மூலம் 5050 எம்.பி.பி.எஸ். இடங்கள், ஈ.எஸ்.ஐ. கல்லூரிகள் மூலம் 3,400 இடங்கள் 3 நிகர்நிலை பல்கலைக் கழகங்கள் மூலம் 450 என ஆக மொத்தம் 9050 இடங்கள் உள்ளன.

    பல் மருத்துவ இடங்கள் 2200 உள்ளன. இது தவிர 6 தனியார் மருத்துவ கல்லூரிகள் புதிதாக தொடங்க தேசிய மருத்துவ ஆணையத்திடம் அனுமதி கேட்டுள்ளனர். புதிய மருத்துவ கல்லூரிக்கு அனுமதி கிடைக்கும் பட்சத்தில் கலந்தாய்வின் போது இடங்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

    அரசு மருத்துவ கல்லூரிகளில் புதிதாக இடங்கள் இந்த ஆண்டு உருவாக்கப் படவில்லை. வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களை மீட்க ஊட்டியில் இருந்து 2 மருத்துவ குழு, மருந்து, மாத்திரையுடன் சென்றுள்ளது. தேவைப்பட்டால் கூடுதலாக அனுப்பவும் தயாராக இருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ரூ.196.16 கோடி செலவில் கட்டப் பட்டு வரும் டவர் பிளாக் கட்டிடத்தை ஆய்வு செய்தார்.

    Next Story
    ×