search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மருத்துவ மாணவி தற்கொலை விவகாரம்: பேராசிரியரை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் கோர்ட்டில் மனு
    X

    மருத்துவ மாணவி தற்கொலை விவகாரம்: பேராசிரியரை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் கோர்ட்டில் மனு

    • தலைமறைவாகி உள்ள பிரீத்தி, ஹரீசை பிடிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.
    • ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள பரமசிவத்தை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்தனர்.

    நாகர்கோவில்:

    தூத்துக்குடி வி.இ.ரோடு பகுதியை சேர்ந்தவர் சிவகுமார், வியாபாரி. இவரது மகள் சுகிர்தா (வயது 27). இவர் குமரி மாவட்டம் குலசேகரத்தில் உள்ள மூகாம்பிகா மருத்துவக் கல்லூரியில் முதுநிலை மயக்கவியல் மருத்துவம் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்த சுகிர்தா கடந்த 6-ந் தேதி ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து குலசேகரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். மாணவி சுகிர்தா எழுதி வைத்திருந்த கடிதத்தையும் கைப்பற்றினார்கள்.

    அந்த கடிதத்தில் கல்லூரி பேராசிரியர் பரமசிவம் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாகவும், சீனியர் மாணவர் ஹரிஷ், மாணவி ப்ரீத்தி ஆகியோர் மனதளவில் டார்ச்சர் செய்ததாகவும் கூறியிருந்தார். இதையடுத்து பரமசிவம், ப்ரீத்தி, ஹரிஷ் ஆகிய 3 பேர் மீது போலீசார் தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்தனர்.

    இதைத்தொடர்ந்து கடந்த 13-ந் தேதி பேராசிரியர் பரமசிவத்தை கைது செய்த போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். இந்த நிலையில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி. ராஜ்குமார், இன்ஸ்பெக்டர் பார்வதி தலைமையிலான போலீசார் விசாரணையை தொடங்கினார்கள். மூகாம்பிகா கல்லூரிக்கு சென்று மாணவி தங்கி இருந்த அறையிலும் ஆய்வு மேற்கொண்டனர்.

    மேலும் தற்கொலை செய்துகொண்ட சுகிர்தாவின் லேப்-டாப், செல்போனை கைப்பற்றியும் விசாரணை நடத்தப்பட்டது. கல்லூரி பேராசிரியர்கள் சிலரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். தற்கொலை செய்துகொண்ட சுகிர்தாவின் பெற்றோரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. கடந்த 2 நாட்களாக போலீசார் கல்லூரியிலேயே முகாமிட்டு மாணவ-மாணவிகளிடமும் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் தலைமறைவாகி உள்ள பிரீத்தி, ஹரீசை பிடிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். அப்போது ஹரிஷ் மதுரை ஐகோட்டில் முன் ஜாமீன் பெற்றார். இதைத் தொடர்ந்து ப்ரீத்தியை போலீசார் தேடி வந்த நிலையில் அவரும் முன் ஜாமீன் கேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

    இதையடுத்து இன்ஸ்பெக்டர் பார்வதி தலைமையிலான போலீசார் மதுரை ஐகோர்ட்டில் ஆஜரானார்கள். இந்த நிலையில் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள பரமசிவத்தை காவலில் எடுத்து விசாரிக்கவும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்தனர். இதையடுத்து இன்று காலை நாகர்கோவில் ஜே.எம்.-1 கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

    Next Story
    ×