search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    8 கோவில்களில் இருக்கும் 130 கிலோ நகைகளை உருக்கி தங்க பத்திரத்தில் முதலீடு- சேகர்பாபு
    X

    8 கோவில்களில் இருக்கும் 130 கிலோ நகைகளை உருக்கி தங்க பத்திரத்தில் முதலீடு- சேகர்பாபு

    • கடந்த அதிமுக ஆட்சியில் இத்திட்டம் முழுமையாக செயலிழந்து இருந்தது.
    • வருவாயை அந்தந்த கோவில்களின் திருப்பணிக்கும், பக்தர்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதற்கும் பயன்படுத்தி வருகின்றோம்.

    சென்னை:

    இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று (செவ்வாய்க்கிழமை) ஆணையர் அலுவலகத்தில் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி ராஜு, க.ரவிச்சந்திர பாபு மற்றும் ஆர்.மாலா ஆகி யோர் முன்னிலையில் 8 கோவில்ளுக்கு காணிக்கை யாக வரப்பெற்ற 130 கிலோ 393 கிராம் எடையுள்ள பல மாற்று பொன் இனங்களை மும்பையில் உள்ள ஒன்றிய அரசின் தங்க உருக்காலையில் உருக்கி தங்க முதலீட்டுப் பத்திரத்தில் முதலீடு செய்திடும் வகையில் பாரத ஸ்டேட் வங்கியின் தலைமைப் பொதுமேலாளர் ரவி ரஞ்ஜனிடம் ஒப்படைத்தார்.

    பின்னர், அமைச்சர் பி.கே.சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

    கலைஞரின் ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட பயன்பாட்டிற்கு இயலாத பொன்னினங்களை உருக்கி வங்கியில் முதலீடு செய்து அதன்மூலம் பெறப்படுகின்ற வட்டி தொகையை அந்தந்த கோவிலுக்கு அடிப்படை தேவைகள் மற்றும் திருப்பணிகளுக்கு செலவிடப்பட்டு வந்தது.

    கடந்த அதிமுக ஆட்சியில் இத்திட்டம் முழுமையாக செயலிழந்து இருந்தது. தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் பல கோவில்களில் நூற்றுக்கணக்கான கிலோ கிராம் எடையுள்ள பலமாற்று பொன்னினங்கள் பயன்படுத்த இயலாமல் கிடப்பதை முதலமைச்சரின் கவனத்திற்கு இந்து சமய அறநிலையத்துறை கொண்டு சென்றவுடன், கலைஞர் ஆட்சிக் காலத்தில் செயல்படுத்தப்பட்ட அந்த திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த உத்தர விட்டதற்கிணங்க ஏற்கனவே பெரியபாளையம், இருக்கன்குடி, திருவேற்காடு, மாங்காடு, திருச்செந்தூர் ஆகிய 5 கோவிலில் இருந்து பலமாற்று பொன்னினங்கள் மும்பையில் இருக்கின்ற மத்திய அரசுக்கு சொந்தமான உருக்காலையில் உருக்கப்பட்டு 344 கிலோ 334 கிராம் எடை கொண்ட சுத்தத் தங்கம் கிடைக்கப் பெற்றவுடன் அதனை தங்க முதலீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்ததில் வட்டியாக ஆண்டிற்கு ரூ.4.31 கோடி தற்போது கிடைக்கின்றது. இந்த வருவாயை அந்தந்த கோவில்களின் திருப்பணிக்கும், பக்தர்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதற்கும் பயன்படுத்தி வருகின்றோம்.

    மேலும், இந்து சமய அற நிலையத்துறை வரலாற்றில் எந்த ஆட்சியிலும் மேற் கொள்ளப்படாத வகையில் திருத்தேர்களை செப்பனிடுதல், புதிய திருத்தேர்கள் உருவாக்குதல், திருக்குளங்களை புனரமைத்தல், பசுமடங்களை மேம்படுத்துதல் போன்ற அரும்பெரும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்து கோவில்களை வைத்து அரசியல் செய்யலாம் என்பவர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சி இருக்கின்றது.

    திருவொற்றியூர் கோவிலில் புளியோதரை கெட்டுப்போன விவகாரம் எங்கள் கவனத்திற்கு வந்தவுடன் சம்பந்தப்பட்ட அலுவலரை உடனடியாக விசாரணை மேற்கொள்ள அறிவுறுத்தி இருக்கிறோம். தவறு இருக்கும் பட்சத்தில் நிச்சயமாக அந்த பிரசாத கடையின் உரிமம் ரத்து செய்யப்பட்டு, நல்ல தரமான உணவு தயாரிக்கும் புதிய நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும். சிறு குறைகள் இருந்தாலும் ஏதாவது ஒரு இடத்தில் இது போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டாலும் உடனடியாக துறையின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டவுடன் அதன் மீது நடவடிக்கை எடுக்கின்ற பணியை இந்து சமய அறநிலைத்துறை பார பட்சமின்றி மேற்கொள்ளும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×