search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மேட்டூர் அணை நீர்மட்டம் 61 அடியாக உயர்ந்தது
    X

    மேட்டூர் அணை நீர்மட்டம் 61 அடியாக உயர்ந்தது

    • கபினி அணையின் நீர்மட்ட உயரம் 84 அடியாகும்.
    • அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    சேலம்:

    கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. கடலோர மாவட்டங்கள் மற்றும் மலை மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் மழையின் காரணமாக பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. குடகு மாவட்டத்தில் தயார் நிலையில் பேடரிடர் மீட்பு குழுவினர் நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் அங்குள்ள பல்வேறு ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் காவிரி மற்றும் பல்வேறு ஆறுகளின் கரையோரத்தில் வசிக்கும் பொதுமக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    தொடர்ந்து மழை பெய்து வருவதால் கபினி மற்றும் கிருஷ்ண ராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. கிருஷ்ண ராஜ சாகர் அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 124.80 அடியாகும். இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 119.90 அடியாக உயர்ந்து காணப்பட்டது. அணைக்கு வினாடிக்கு 51 ஆயிரத்து 375 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இதுவரை கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்படவில்லை. உள்ளூர் பாசன தேவை மற்றும் குடிநீருக்காக மட்டுமே தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை முதல் காவிரி ஆற்றில் வினாடிக்கு 4 ஆயிரத்து 714 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    கபினி அணையின் நீர்மட்ட உயரம் 84 அடியாகும். இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 80.76 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 45 ஆயிரத்து 658 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 40 ஆயிரத்து 292 கனஅடி தண்ணீர் வெளியேற்ற ப்பட்டு வருகிறது.

    கபினி, கிருஷ்ண ராஜ சாகர் ஆகிய 2 அணைகளுக்கும் 97 ஆயிரத்து 33 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இந்த அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் வினாடிக்கு 47 ஆயிரத்து 714 கனஅடி தண்ணீர் வெளியேற்ற ப்பட்டு வருகிறது.

    கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரித்து காணப்படு வதால் தமிழக எல்லையான பிலிகுண்டு பகுதிக்கு இன்று காலை வினாடிக்கு 61 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இதன் காரணமாக ஒகேனக்கல் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இந்த தண்ணீர் நேரமாக காவிரி ஆற்றில் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டு இருக்கிறது. இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

    மேட்டூர் அணைக்கு நேற்று வினாடிக்கு 44 ஆயிரத்து 353 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று காலை 53 ஆயிரத்து 98 கனஅடியாக அதிகரித்து காணப்பட்டது. இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 61.31 அடியாக உயர்ந்தது. நேற்று காலை 55 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் கடந்த 24 மணி நேரத்தில் 6 அடி உயர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    Next Story
    ×