search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்வு
    X

    மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்வு

    • கபினி அணை மட்டும் முழு கொள்ளளவை எட்டி ஏற்கனவே நிரம்பி விட்டது.
    • நீர்வரத்தை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

    சேலம்:

    கர்நாடகத்தில் தென் மேற்கு பருவமழை தீவிரம் அடைய தொடங்கி உள்ளது. இதனால் மாநிலத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக காவிரி படுகையில் நல்ல மழை பெய்து வருவதால் அங்குள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    தொடர் கனமழையால் காவிரி படுகையில் உள்ள கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்), கபினி, ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து அணைகள் நிரம்பி வருகின்றன. இதில் கபினி அணை மட்டும் முழு கொள்ளளவை எட்டி ஏற்கனவே நிரம்பி விட்டது. கபினி அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 84 அடியாகும். இன்று காலை நிலவரப்படி இந்த அணைக்கு 33,640 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையில் இருந்து வினாடிக்கு 33,625 கன அடி தண்ணீர் கபிலா ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த உபரி தண்ணீர் நேரடியாக காவிரி ஆற்றில் சங்கமித்து கரைபுரண்டு ஓடியவாறு தமிழகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறது.

    இதேபோல் கே.ஆர்.எஸ் அணையின் மொத்த நீர்மட்டம் கொள்ளளவு 124.80 அடி ஆகும். நேற்று மாலை நிலவரப்படி இந்த அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 35,977 கன அடியாக அதிகரித்தது. தொடர்ந்து இன்று 36,674 கன அடி தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. இதனால் நேற்று முன்தினம் 105.40 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 110.60 அடியாக உயர்ந்தது. அணையில் இருந்து உள்ளூர் குடிநீர் மற்றும் உள்ளூர் பாசன தேவைக்காக வினாடிக்கு 2,361 கன அடி நீர் கால்வாயில் திறந்து விடப்பட்டு வருகிறது. கே.ஆர்.எஸ். அணையில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடவில்லை.

    கபினி அணையில் இருந்து திறந்து விடப்பட்ட உபரி நீர் காரணமாக தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டு பகுதிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த நீர்வரத்தை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

    இதனால் ஒகேனக்கல் ஐந்தருவி, பெரியபாணி, மெயின் அருவி, சினி அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. நள்ளிரவில் இருந்து ஒகேனக்கல்லுக்கு உபரி நீர் வினாடிக்கு 20 ஆயிரம் கன அடி வந்து கொண்டிருக்கிறது. நீர்வரத்து மேலும் அதிகரிக்க கூடும் என்பதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி ஒகேனக்கல் அருவியில் குளிப்பதற்கும், காவிரி ஆற்றில் நேற்று முதல் பரிசல் இயக்குவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை தொடர்ந்து இன்று 2-வது நாளாக நீடிக்கிறது.

    இந்த தண்ணீர் ஒகேனக்கல் வழியாக நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது. நேற்று மாலை மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 16 ஆயிரத்து 577 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 20 ஆயிரத்து 910 கன அடியாக அதிகரித்து தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 1,000 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்தை விட நீர் திறப்பு அளவு குறைவாக உள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. நேற்று காலை 8 மணி அளவில் 43.83 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 8 மணி அளவில் 46.80 அடியாக உயர்ந்தது. நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அணையில் நீர் இருப்பு 15.85 டி.எம்.சி. உள்ளது.

    நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் பாசன பகுதி விவசாயிகள், குடிநீர் பெறும் மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    Next Story
    ×