search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து தண்ணீர் திறப்பு
    X

    டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து தண்ணீர் திறப்பு

    • கர்நாடகா காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் அங்குள்ள அணைகள் நிரம்பின.
    • கல்லணையில் உள்ள தலைப்பு பகுதியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருந்தது.

    தஞ்சாவூா்:

    தஞ்சாவூா், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்பட காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆண்டுதோறும் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

    குறுவை பாசனத்திற்காக மேட்டூர் அணை நீர் இருப்பை பொறுத்து ஜூன் 12-ந் தேதி அல்லது அதற்கு முன்னரோ, பின்னரோ திறக்கப்படும். இந்த ஆண்டு கர்நாடக அரசு உரிய நீரை வழங்காததால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கணிசமாக குறைந்தது. போதிய அளவில் தண்ணீர் இல்லாததால் டெல்டா மாவட்ட குறுவை பாசனத்திற்கு ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறந்து விடப்படவில்லை. இதனால் மாவட்டங்களில் பம்பு செட் ஆழ்துளைக்கிணறு பயன்படுத்தி மட்டுமே குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டது.

    இந்த நிலையில் கர்நாடகா காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் அங்குள்ள அணைகள் நிரம்பின. தொடர்ந்து மேட்டூர் அணைக்கு உபரி நீர் திறந்து விடப்பட்டது. நாளுக்கு நாள் அதிக கன அடியில் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது.

    இதையடுத்து கடந்த 28-ந் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி அமைச்சர் கே.என்.நேரு மேட்டூர் அணையில் இருந்து டெல்டா மாவட்ட பாசனத்திற்காக தண்ணீரை திறந்து வைத்தார். அந்த தண்ணீர் நேற்று மாலை திருச்சி மாவட்டம் முக்கொம்பிற்கு வந்தடைந்தது. அங்கு விவசாயிகள் பூக்கள் தூவி வரவேற்றனர். தொடர்ந்து காவிரி தண்ணீர் தஞ்சை மாவட்டம் கல்லணைக்கு வந்தடைந்தது. கல்லணைக்கு வந்த தண்ணீரை காவிரி, கொள்ளிடம், வெண்ணாறு, கல்லணைக் கால்வாய் ஆகிய ஆறுகளில் பிரித்து வழங்குவதற்கான நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது.

    இதற்காக ஏற்கனவே கல்லணையில் உள்ள தலைப்பு பகுதியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருந்தது. இதையடுத்து கல்லணையில் இருந்து டெல்டா மாவட்ட பாசனத்திற்காக காவிரியில் வினாடிக்கு 1500 கன அடி, வெண்ணாற்றில் வினாடிக்கு 1000 கன அடி, கொள்ளிடத்தில் 400 கன அடி, கல்லணை கால்வாயில் வினாடிக்கு 500 கன அடி வீதமும் தண்ணீரை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா ஆகியோர் பொத்தானை அழுத்தி திறந்து வைத்து சாகுபடி அனைத்தும் நல்ல முறையில் நடைபெற வேண்டும் என ஆறுகளில் பூக்கள், நவதானிங்களைத் தூவி வணங்கினர்.

    தொடர்ந்து விவசாயிகள் காவிரி நீரை பயன்படுத்தி நல்ல முறையில் சாகுபடி செய்து அதிக விளைச்சல் கொடுக்க வேண்டும் என்று ஆற்றில் பூக்கள் தூவி வழிப்பட்டனர். கல்லணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் மூலம் டெல்டா மாவட்டங்களில் 7.95 லட்சத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி மேற்கொள்ளப்பட உள்ளது.

    Next Story
    ×