search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஊரகப்பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்டம்- நாளை தொடங்கி வைக்கிறார் மு.க.ஸ்டாலின்
    X

    ஊரகப்பகுதிகளில் 'மக்களுடன் முதல்வர்' திட்டம்- நாளை தொடங்கி வைக்கிறார் மு.க.ஸ்டாலின்

    • மக்களுடன் முதல்வர் திட்டம் குறித்த குறும்படமும் திரையிடப்படுகிறது.
    • பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் முதலமைச்சர் வழங்குகிறார்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் பாளையம்புதூரில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை (வியாழக்கிழமை) ஊரகப்பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

    அரசுத் துறைகளின் சேவைகள் விரைவாகவும் எளிதாகவும் சென்றுசேரும் வகையில் "மக்களுடன் முதல்வர்" என்ற திட்டத்தை அறிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதற்கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் கடந்த ஆண்டு டிசம்பர் 18-ந்தேதி தொடங்கி வைத்தார். அதன்மூலம் மொத்தம் 8.74 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.

    நகரப்பகுதிகளில் இந்தத் திட்டத்திற்கு கிடைத்த வரவேற்பினையடுத்து, அடுத்தகட்டமாக அனைத்து மாவட்டங்களில் உள்ள ஊரகப் பகுதிகளிலும் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

    இந்த திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள 12,500 ஊராட்சிகளில், 2500 முகாம்கள் மூலம் 15 அரசு துறைகளின் 44 சேவைகளுக்காக பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்படுகிறது.

    இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்திட தருமபுரி மாவட்டத்தில் நல்லம்பள்ளி அருகே பாளையம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நாளை (11-ந்தேதி) ஊரக பகுதிகளில் "மக்களுடன் முதல்வர்" திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

    இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாளை காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் சேலம் மாவட்டம், ஓமலூர் விமான நிலையத்திற்கு 10 மணிக்கு வருகிறார்.

    பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்டு சாலை மார்க்கமாக தருமபுரி மாவட்டம் பாளையம்புதூர் வந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். பின்னர் அவர் ஊரகப்பகுதிகளுக்கான மக்களுடன் முதல்வர் திட்ட தொடக்க விழா, மனுக்கள் பெறுதல் மற்றும் துறை சார்ந்த அரங்குகளை பார்வையிடுகிறார்.

    இதை தொடர்ந்து 20 புதிய நகர பஸ்களை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். பின்னர் அவர் விழா மேடை வந்தடைகிறார்.

    இதனை அடுத்து கலெக்டர் சாந்தி வரவேற்புரையாற்றுகிறார்.

    காலை 11 மணிக்கு முதலமைச்சர், அமைச்சர்களுக்கு கலெக்டர் சாந்தி நினைவு பரிசுகளை வழங்குகிறார். விழா அரங்கில் திட்டப்பணிகளின் குறும்படம் திரையிடப்படுகிறது. தொடர்ந்து 11.10 மணிக்கு முடிவுற்ற திட்ட பணிகளை திறந்து வைக்கிறார்.

    இதையடுத்து மக்களுடன் முதல்வர் திட்டம் குறித்த குறும்படமும் திரையிடப்படுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 11.20 மணிக்கு பேரூரை ஆற்றுகிறார். இதை தொடர்ந்து பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் முதலமைச்சர் வழங்குகிறார்.

    முதலமைச்சர் வருகையையொட்டி சிறப்பான வரவேற்பு அளிக்கும் வகையில் சேலம் மாவட்டம் ஓமலூர் விமான நிலையத்தில் இருந்து தருமபுரி மாவட்டம் வரை சாலையில் வழிநெடுங்கிலும் தொண்டர்கள் தி.மு.க. கட்சி கொடியை கட்டி வருகின்றனர்.

    Next Story
    ×