search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    விக்கிரவாண்டி- ஒரு அமைச்சர் குறைந்தபட்சம் 9 ஆயிரம் வாக்குகளை திரட்ட வேண்டும்
    X

    விக்கிரவாண்டி- ஒரு அமைச்சர் குறைந்தபட்சம் 9 ஆயிரம் வாக்குகளை திரட்ட வேண்டும்

    • அ.தி.மு.க. தேர்தலில் போட்டியிடாமல் புறக்கணிப்பதாக அறிவித்து உள்ளது.
    • இடைத்தேர்தலில் தி.மு.க. வழக்கம் போல் அதே கூட்டணி பலத்துடன் தேர்தலை சந்திக்கிறது.

    விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் மரணம் அடைந்த காரணத்தால் அங்கு அடுத்த மாதம் (ஜூலை) 10-ந் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.

    இந்த இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக அன்னியூர் சிவா, பா.ம.க. வில் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சியில் டாக்டர் அபிநயா ஆகியோர் இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. அ.தி.மு.க. தேர்தலில் போட்டியிடாமல் புறக்கணிப்பதாக அறிவித்து உள்ளது.

    கடந்த 2021-ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி 93,730 ஓட்டுகளும் பா.ம.க. கூட்டணியில் போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் முத்தமிழ்செல்வன் 84,157 ஓட்டுகளும் வாங்கி இருந்தனர். சுமார் 9 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில்தான் தி.மு.க. எம்.எல்.ஏ. வெற்றி பெற்றிருந்தார்.

    தற்போது இடைத்தேர்தலில் தி.மு.க. வழக்கம் போல் அதே கூட்டணி பலத்துடன் தேர்தலை சந்திக்கிறது.

    அ.தி.மு.க., தே.மு.தி.க. போட்டியிடாததால் அக்கட்சி வாக்குகள் பா.ம.க. வேட்பாளருக்கு கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    விக்கிரவாண்டி தொகுதியில் வன்னியர்கள் 50 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளனர். அதற்கு அடுத்த படியாக ஆதி திராவிடர் வாக்குகளும், முதலியார், உடையார் வாக்குகளும் உள்ளன. அதன் காரணமாக வன்னியர்களை ஒவ்வொரு கட்சியும் வேட்பாளராக நிறுத்தி உள்ளது.

    இந்த தொகுதியை பொறுத்தவரையில் தி.மு.க. அ.தி.மு.க. சம பலத்துடன் உள்ளன. நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதியில் தி.மு.க. ஆதரவுடன் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 72,188 ஓட்டுகளும், அ.தி.மு.க. 65,365 ஓட்டுகளும், பா.ஜனதா 32,198 ஓட்டுகளும் பெற்றுள்ளன.

    இதனால் இடைத்தேர்தலை பொறுத்தவரை ஆளும் கட்சியான தி.மு.க. கடந்த 10 நாட்களுக்கு முன்னதாகவே தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்துவிட்டது. அதில் முன்னாள் மத்திய மந்திரி ஜெகத்ரட்சகன், அமைச்சர் பொன்முடி ஆகியோர் தலைமையில் 9 அமைச்சர்களை தேர்தல் பணிக்குழுவில் அறிவித்து அதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சக்கரபாணி, தா.மோ.அன்பரசன், சிவசங்கர், சி.வி.கணேசன், அன்பில்மகேஷ் பொய்யாமொழி, டாக்டர் லட்சுமணன் எம்.எல்.ஏ. ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

    இவர்கள் அனைவரும் விக்கிரவாண்டியில் கடந்த வாரம் ஆலோசனைக் கூட்டம் நடத்தி உள்ளனர். அதில் எந்தெந்த அமைச்சர்கள் எந்தெந்த ஒன்றியத்தை பார்க்க வேண்டும் என்று பிரிக்கப்பட்டுள்ளது.

    கானை மத்திய ஒன்றியம்-அமைச்சர் கே.என்.நேரு, விக்கிரவாண்டி கிழக்கு ஒன்றியம், எ.வ.வேலு, மேற்கு ஒன்றியத்துக்கு எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கானை வடக்கு ஒன்றியம்-சக்கரபாணி, கோலியனூர் மேற்கு ஒன்றியம்-தா.மோ.அன்பரசன், விக்கிரவாண்டி மத்திய ஒன்றியம்-சிவசங்கர், விக்கிரவாண்டி பேரூர்-சி.வி.கணேசன், கானை தெற்கு ஒன்றியத்துக்கு அன்பில் மகேஷ் பொய்யாமொழி, லட்சுமணன் எம்.எல்.ஏ. நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இவர்கள் ஒவ்வொருவருக்கும் அதிகபட்சமாக 9 ஆயிரம் ஓட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவர்கள் மூலம் 2 லட்சம் ஓட்டுகளுக்கு தி.மு.க.வில் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    இந்த 9 அமைச்சர்களின் கீழ் மற்ற அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மாவட்டச் செயலாளர்கள் பணியாற்ற பஞ்சாயத்துகள், ஒதுக்கப்பட்டு உள்ளது. இவர்களுக்கு ஊராட்சி பூத் வாரியாக ஓட்டுகள் திரட்டுவதற்கு இலக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

    அதன்படி அமைச்சர் தா.மோ.அன்பரசன் 7 ஊராட்சிகளில் 11 பூத்தில் உள்ள 8,942 ஓட்டுகளை கவனிக்க வேண்டும்.

    அமைச்சர் பெரிய கருப்பன் 2 ஊராட்சிகளில் 5 பூத்தில் 4,310 வாக்குகளையும், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் 3 ஊராட்சிகளில் உள்ள 3,694 வாக்குகளையும் பார்க்க வேண்டும்.

    அமைச்சர் பி.மூர்த்திக்கு 3,700 ஓட்டுகளும், செஞ்சி மஸ்தானுக்கு 5,805 ஓட்டுகளும் கொடுக்கப்பட்டு உள்ளன.

    இதே போல் ஒவ்வொரு அமைச்சர்கள், எம்.எல்.ஏ. க்கள், மாவட்டச் செயலாளர்களுக்கும் 'பூத்' வாரியாக பணியாற்ற ஒட்டுகள் பிரித்து கொடுக்கப்பட்டு உள்ளது.

    இதனால் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்டச் செயலாளர்கள் தங்கி பணியாற்றுவதற்காக விக்கிரவாண்டி விழுப்புரத்தில் ஒவ்வொருவருக்கும் வாடகை வீடு பார்க்கும் படலமும் தொடங்கி உள்ளது.

    அடுத்த மாதம் (ஜூலை) 1-ந் தேதி வரை தங்குவதற்கு ரூ.1 லட்சம் வரை வாடகை கொடுக்க தயாராக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    ஆனாலும் வசதியான வீடு கிடைப்பதில் சிரமம் உள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    எப்படியானாலும் நடப்பு சட்டசபைக் கூட்டத் தொடர் முடிவதற்குள் ஏதாவது ஒரு வீட்டை வாடகைக்கு பிடித்து தர வேண்டும் என்று உதவியாளர்களுக்கு அமைச்சர்கள் உத்தரவிட்டு உள்ளனர்.

    அதனால் விக்கிரவாண்டி-விழுப்புரம் பகுதிகளில் வாடகை வீடு தேடி கொடுக்கும் புரோக்கர்களுக்கு தேவை, மிகக் கடுமையாக அதிகரித்துள்ளது.

    Next Story
    ×