search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கோவை மினி உயிரியல் பூங்காவில் இருந்து 10-க்கும் மேற்பட்ட விலங்குகள் வண்டலூர் கொண்டு வரப்படுகிறது
    X

    கோவை மினி உயிரியல் பூங்காவில் இருந்து 10-க்கும் மேற்பட்ட விலங்குகள் வண்டலூர் கொண்டு வரப்படுகிறது

    • கோவை வ.உ.சி. உயிரியல் பூங்காவின் அங்கீகாரத்தை மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் ரத்து செய்தது.
    • பறவைகள், பாலூட்டிகள் மற்றும் ஊர்வனவற்றை கொண்டு செல்வதற்காக மொத்தம் 15 பெட்டிகள் தயார் செய்யப்பட்டுள்ளன.

    கோவையில் வ.உ.சி. மினி உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு ஏராளமான விலங்குகள் மற்றும் பறவைகள் உள்ளன. இந்த நிலையில் கோவை வ.உ.சி. உயிரியல் பூங்காவின் அங்கீகாரத்தை மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் ரத்து செய்தது.

    இதையடுத்து அங்கிருக்கும் விலங்குகள் மற்றும் பறவைகள் மற்ற உயிரியல் பூங்காக்களுக்கு மாற்றப்படுகின்றன. இதில் 10-க்கும் மேற்பட்ட விலங்குகள் சென்னை வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவுக்கு கொண்டு வரப்படுகின்றன.

    இதுகுறித்து வண்டலூர் உயிரியல் பூங்கா இயக்குனர் ஸ்ரீனிவாஸ் ஆர்.ரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:-

    கோவையில் உள்ள வ.உ.சி. உயிரியல் பூங்காவில் உள்ள 10-க்கும் மேற்பட்ட விலங்குகள் வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்டு மறுவாழ்வு அளிக்கப்பட உள்ளன. கோவை மாநகராட்சி நடத்தும் உயிரியல் பூங்காவின் அங்கீகாரத்தை மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் ரத்து செய்ததால், அவை சென்னைக்கு கொண்டு வரப்படுகின்றன.

    கோவை உயிரியல் பூங்காவில் 487 பறவைகள், 62 ஊர்வன பிராணிகள், 8 நாகப்பாம்புகள், 8 சாதாரண வகை பாம்புகள், 5 கட்டு விரியன் பாம்புகள், 11 மலைப்பாம்புகள், 86 பாலூட்டி விலங்குகள் உள்ளன. இதில் கொக்கு, கிளிகள் போன்றவையும் அடங்கும்.

    பாம்பு போன்ற ஊர்வன பிராணிகள் வனப்பகுதியில் விடப்படும் நிலையில், அவற்றில் சில சேலத்தில் உள்ள குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவிற்கும், மற்றொரு வகை விலங்குகள் மற்றும் ஊர்வன பிராணிகள் வேலூரில் உள்ள அமிர்தி உயிரியல் பூங்காவிற்கும் அனுப்பப்படும். பறவைகள், பாலூட்டிகள் மற்றும் ஊர்வனவற்றை கொண்டு செல்வதற்காக மொத்தம் 15 பெட்டிகள் தயார் செய்யப்பட்டுள்ளன. இந்த விலங்குகள் 45 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படும். புதிதாக வரும் விலங்குகளை தனிமைப்படுத்துதல் மற்றும் காட்சிப்படுத்துதல் ஆகிய இரண்டிற்கும் தேவையான வசதிகள் மிருகக்காட்சி சாலையில் தயாராக உள்ளன. வண்டலூர் உயிரியல் பூங்கா ஊழியர்கள் பறவைகள், ஊர்வன மற்றும் பாலூட்டிகளை கோவையில் இருந்து வண்டலூருக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள். இதற்கு 3 அல்லது 4 நாட்கள் ஆகும்.

    ஜம்மு-காஷ்மீர் உயிரியல் பூங்காவில் இருந்து ஒரு ஜோடி இமயமலை கருப்பு கரடிகளும் வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு வருகின்றன. ஜம்மு-காஷ்மீரில் இருந்து கரடிகளை கொண்டுவர ஒப்புதல் கிடைத்துள்ளது. கரடிகள் ரெயில் மூலம் சென்னைக்கு வரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×