என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கொடைக்கானலில் கடும் பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதி
- காலை நேரங்களில் பனிமூட்டத்துடன் குளிர்ந்த சூழல் காணப்படுகிறது.
- சுற்றுலா வாகனங்கள் மற்றும் இதர வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே சென்றன.
கொடைக்கானல்:
கொடைக்கானலில் கடந்த சில நாட்களாகவே பகல் நேரங்களில் குறைந்த அளவு வெயில் மற்றும் மாலை நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும் காலை நேரங்களில் பனிமூட்டத்துடன் குளிர்ந்த சூழல் காணப்படுகிறது.
மாறுபட்ட இந்த சூழ்நிலையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வருகிறது. நேற்று பகல் முழுவதும் மேகமூட்டம் நிலவிய நிலையில் அவ்வப்போது மழை பெய்து பின்னர் இரவில் கனமழையாக கொட்டி தீர்த்தது.
இன்று காலை முதல் கடுமையான பனிமூட்டமும், சாரல் மழையும் பெய்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை இல்லாத நிலையில் மாணவ-மாணவிகளும் சிரமத்துடனேயே பள்ளிக்கு செல்லும் நிலை ஏற்பட்டது.
சுற்றுலா வாகனங்கள் மற்றும் இதர வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே சென்றன. காலை நேரத்தில் நீண்டநேரம் இதேபோல் பனிமூட்டம் நிலவியதால் ஏரிச்சாலையில் ஒரு சில இடங்களில் தீமூட்டி குளிர்காய்ந்தும் வந்தனர். சுற்றுலா பயணிகளுக்கு இந்த சீதோஷ்ண நிலை ரம்மியமாக இருந்தாலும் வாகன ஓட்டிகள் தவிப்புக்கு உள்ளாகினர்.






