search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நெல்லையப்பர் கோவிலில் அரியவகை ஓலைச்சுவடிகள் கண்டுபிடிப்பு

    • கிரந்த எழுத்து வடிவில் 12 பனையோலை சுவடிகள் கண்டுபிடிக்கப்பட்டது.
    • திருஞான சம்பந்தரின் தேவாரப்பாடல் அடங்கிய ஓலைச்சுவடிகள் இருப்பதும் தெரியவந்தது.

    நெல்லை:

    இந்து சமய அறநிலையத்துறையின் ஓலைச்சுவடிகள் நூலாக்க திட்டப்பணி குழுவினர் அறநிலையத்துறைக்கு உட்பட்ட சுமார் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்களில் உள்ள பழங்கால ஓலைச்சுவடிகளை சேகரித்து வருகின்றனர்.

    அதன்படி கடந்த 4 நாட்களாக பழமை வாய்ந்த சிவாலயங்களில் ஒன்றான நெல்லை டவுன் நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவிலில் உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவன சுவடியியல் துறை பேராசிரியர் தாமரை பாண்டியன் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.

    அவருடன் சுவடியியலாளர்கள் சண்முகம், சந்தியா, நீலகண்டன், பாலசுப்பிரமணியன் அடங்கிய குழுவினர் நெல்லையப்பர் கோவில் நூலகத்தில் உள்ள சுவடிகளை ஆய்வு செய்தனர்.

    அப்போது கோவில் நிர்வாகத்தால் பாதுகாக்கப்பட்டு வந்த 10 செப்பு பட்டயங்களை ஆய்வு செய்தனர். மேலும் கிரந்த எழுத்து வடிவில் வேணுவன நாத ஸ்தல புராணம், சைவ அக்னி காரியம் உள்ளிட்டவை குறித்த 12 பனையோலை சுவடிகள் கண்டுபிடிக்கப்பட்டது.

    மேலும் திருஞான சம்பந்தரின் தேவாரப்பாடல் அடங்கிய ஓலைச்சுவடிகள் இருப்பதும் தெரியவந்தது.

    இதுகுறித்து திட்டப்பணியின் ஒருங்கிணைப்பாளர் தாமரைப்பாண்டியன் கூறுகையில், பழமை வாய்ந்த சிறிய சிறிய அறைகள் அமைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த ஓலைச்சுவடிகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

    கூடுதலாக 2 அரிய தாள் சுவடிகள் கிடைத்துள்ளது. அதில் திருஞானசம்பந்தரின் 3 திருமுறைகள் அடங்கிய தேவார பாடல்கள் இருந்தன. அதன் தொடக்க பக்கத்தில் தோடுடைய செவியன் எனும் பாடல் இடம் பெற்றுள்ளது.

    இந்த பிரதிகள் செய்தவரின் குறிப்புகள் இல்லை. இவை 200 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம். இங்கு கண்டறியப்பட்ட பட்ட யங்களை ஆராயும் பணி தொடர்ந்து நடை பெற்று வருகிறது.

    தற்போது கண்டு பிடிக்கப்பட்ட பனையோலை சுவடிகளில் 281 ஓலைச்சுவடிகள் நல்ல நிலையில் உள்ளது என்றார்.

    Next Story
    ×