search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    இல்லம் தேடி ஆவின் ஐஸ்கிரீம் விற்பனை செய்யும் புதிய திட்டம்- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
    X

    'இல்லம் தேடி ஆவின்' ஐஸ்கிரீம் விற்பனை செய்யும் புதிய திட்டம்- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

    • பேட்டரி தள்ளு வண்டிகளில் ஐஸ் கிரீம் விற்பனையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
    • ஒரு பேட்டரி வண்டி மற்றும் குளிர் சாதன பெட்டியின் விலை ரூ.1 லட்சத்து 21 ஆயிரத்து 658 ஆகும்.

    சென்னை:

    ஆவின் நிறுவனம் சார்பில் 'இல்லம் தேடி ஆவின்' என்ற பெயரில் பேட்டரி தள்ளுவண்டி மூலம் வீடு வீடாக சென்று ஆவின் ஐஸ்கிரீம் விற்பனை செய்யும் திட்ட தொடக்க விழா சென்னை சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் இன்று நடந்தது. நிகழ்ச்சிக்கு அமைச்சர் சா.மு.நாசர் தலைமை தாங்கினார்.

    இதில் பேட்டரி தள்ளு வண்டிகளில் ஐஸ் கிரீம் விற்பனையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். பெண்களுக்கு சுய தொழில் தொடங்கும் திட்டத்தின் கீழ் இந்த தள்ளு வண்டிகளை 100-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். பின்னர் எழிலகம் ஆவின் பாலகத்தையும் அவர் பார்வையிட்டார்.

    வீடு தேடி ஐஸ் கிரீம் விற்பனை செய்யும் இந்த வேலைவாய்ப்பு பெண்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு உள்ளது. இதில் ஒரு பேட்டரி வண்டி மற்றும் குளிர் சாதன பெட்டியின் விலை ரூ.1 லட்சத்து 21 ஆயிரத்து 658 ஆகும். ரூ.10 ஆயிரம் டெபாசிட் கட்டிய பெண்களுக்கு இந்த வண்டி வழங்கப்பட்டது.

    வீடு வீடாக சென்று ஆவின் ஐஸ் கிரீம் விற்பனை செய்யும் பெண்களுக்கு ஒரு மொபைல் செயலி வழங்கப்பட்டுள்ளது. இந்த செயலியில் விற்பனை செய்வதற்கு என்னென்ன ஐஸ் கிரீம்கள் எவ்வளவு வேண்டும் என்பதை முந்தைய நாள் இரவே ஆர்டர் செய்து ஆன்லைனில் பணம் செலுத்த வேண்டும்.

    மறுநாள் காலையில் அவர்களின் இருப்பிடத்துக்கு சென்று ஐஸ்கிரீம் வினியோகம் செய்யப்படும். இதை அவர்கள் வீடுகள் தோறும் சென்று விற்பனை செய்யலாம்.

    ஐஸ்கிரீம் விற்பனை செய்யும் பெண்கள் கமிஷன் அடிப்படையில் வருவாய் ஈட்டலாம்.

    குல்பி, கப் ஐஸ், சாக்கோபார், கசாடா, கேண்டி, பிரிமீயம் ஐஸ்கிரீம் உள்ளிட்ட 100 வகை ஐஸ்கிரீம்களை விற்பனை செய்யலாம். பொதுமக்கள் கூடும் இடங்களிலும் ஆவின் ஐஸ்கிரீம் விற்பனை செய்யப்படும். பள்ளி, கல்லூரி, குடியிருப்பு நிகழ்ச்சிகள், திருமணம், திருவிழா உள்ளிட்ட விழாக்களில் ஐஸ்கிரீம் தேவைப்பட்டாலும் இந்த பேட்டரி தள்ளு வண்டிகளில் ஐஸ் கிரீம் அனுப்பி வைக்கப்படும்.

    ஆவின் பாலகத்தில் ஏற்கனவே லஸ்சி, தயிர், மோர், ஐஸ்கிரீம் ஆகியவை விற்பனை செய்யப்படுகிறது. தற்போது கோடையை முன்னிட்டு வீடுகளுக்கே சென்று ஐஸ்கிரீம் விற்பனை செய்யப்படுகிறது.

    இந்நிகழ்ச்சியில் தி.மு.க. மாவட்ட செயலாளர் சிற்றரசு, பகுதி செயலாளர் மதன்மோகன், ஆவின் மேலாண்மை இயக்குனர் சுப்பையன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×