search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஐ.எஸ். அமைப்பைச் சேர்ந்த கேரள ஆசாமி அதிரடி கைது
    X

    ஐ.எஸ். அமைப்பைச் சேர்ந்த கேரள ஆசாமி அதிரடி கைது

    • கேரள மாநிலம் திருச்சூர் பகுதியைச்சேர்ந்த சீயித் நபீல்அகமது என்பவரை என்.ஐ.ஏ. போலீசார் தேடி வந்தனர்.
    • சென்னை பாடி பகுதியில் பதுங்கி இருந்த அவரை என்.ஐ.ஏ. போலீசார் நேற்று அதிரடியாக சுற்றி வளைத்து கைது செய்தனர்.

    சென்னை:

    தடை செய்யப்பட்ட ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினர் இந்தியா முழுவதும் தங்கள் அமைப்பை வலுப்படுத்த தீவிரமாக செயல்பட்டு வருவதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது. ஐ.எஸ். அமைப்பைச்சேர்ந்தவர்களை என்.ஐ.ஏ. போலீசார் வேட்டையாடி பிடித்து வருகிறார்கள். கேரள மாநிலம் கொச்சி என்.ஐ.ஏ. போலீசார் கடந்த ஜூலை மாதம் ஒரு வழக்குப்பதிவு செய்தனர்.

    அந்த வழக்கின் அடிப்படையில், ஏற்கனவே 2 பேரை என்.ஐ.ஏ. போலீசார் கைது செய்தனர். அவர்களில் ஒருவர் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தைச்சேர்ந்த ஆசீப் என்பவர் ஆவார்.

    இந்த நிலையில் கேரள மாநிலம் திருச்சூர் பகுதியைச்சேர்ந்த சீயித் நபீல்அகமது என்பவரை என்.ஐ.ஏ. போலீசார் தேடி வந்தனர். அவர் கேரளா, தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களில் ஐ.எஸ். அமைப்புக்கு தீவிரமாக பணம் சேகரித்தல், ஆட்களை சேர்த்தல் போன்ற நடவடிக்கைகளில் தீவிரமாக செயல்பட்டு வந்ததாக தெரிகிறது.

    அவர் சென்னையில் பதுங்கி இருந்து கொண்டு, போலி ஆவணங்கள் மூலம் நேபாள நாட்டுக்கு தப்பிச்செல்ல முயற்சிப்பதாகவும் என்.ஐ.ஏ. போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    சென்னை பாடி பகுதியில் பதுங்கி இருந்த அவரை என்.ஐ.ஏ. போலீசார் நேற்று அதிரடியாக சுற்றி வளைத்து கைது செய்தனர். அவரிடம் இருந்து ஐ.எஸ். அமைப்பு தொடர்பான டிஜிட்டல் ஆவணங்களை என்.ஐ.ஏ. போலீசார் பறிமுதல் செய்தனர். அவர் கேரளா கொண்டு செல்லப்பட்டு, தீவிர விசாரணைக்கு பிறகு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்படுவார் என்று போலீசார் தெரிவித்தனர்.

    Next Story
    ×