என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

4 வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் 'திடீர்' சோதனை- ஒருவரை விசாரணைக்கு அழைத்து சென்றதால் பரபரப்பு
- அந்தந்த பகுதிகளை சேர்ந்த போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.
- தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அப்பாசை விசாரணைக்காக அழைத்துச் சென்றுவிட்டனர்.
மதுரை:
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக பணம் திரட்டியது, பணப்பரி மாற்றத்தில் ஈடுபட்டது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் மாநிலம் முழுவதும் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக 16 பேர் அடங்கிய என்.ஐ.ஏ. அதிகாரிகள் குழுவினர் இன்று அதிகாலை மதுரைக்கு வந்தனர். அவர்கள் 4 குழுக்களாக சென்று நெல்பேட்டை, வில்லாபுரம், தெப்பக்குளம் ஆகிய 3 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.
நெல்பேட்டையில் மட்டும் 2 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை செய்தனர். 4 வீடுகளிலும் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தப்பட்டது. மேலும் அங்கிருந்த கம்ப்யூட்டர், லேப்-டாப், செல்போன்கள் மற்றும் வங்கி ஆவணங்கள் ஆகியவை கைப்பற்றினர்.
இதற்கிடையே அந்தந்த பகுதிகளை சேர்ந்த போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.
மதுரையில் அதிகாலை நேரத்தில் சோதனை நடத்தப்பட்டதால் மேற்கண்ட தகவல் யாருக்கும் தெரியவில்லை.
மதுரை நெல்பேட்டையில் அப்பாஸ் என்பவர் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தியபோது ஆவணங்கள், செல்போன், லேப்-டாப் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. அப்பாஸ் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் பல்வேறு கேள்விகள் எழுப்பினர். அதற்கு அவர்கள் முழுமையாக பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அப்பாசை விசாரணைக்காக அழைத்துச் சென்றுவிட்டனர். மதுரை மாவட்டத்தில் அப்பாசிடம் எங்கு வைத்து விசாரணை நடத்தப்படுகிறது? என்பது பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதிலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சமூக விரோத கும்பல்களுக்கு உடந்தையாக இருந்த பல்வேறு அமைப்புகள் தடை செய்யப்பட்டன. இதனைத்தொடர்ந்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நாடு முழுவதிலும் அந்த அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் வீடு மற்றும் அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது மதுரையிலும் சோதனை நடத்தப்பட்டது.
இதில் தீவிரவாத இயக்கங்களுக்கு பணம் திரட்டியதாகவும், வெளி நாட்டில் இருந்து பணம் பெற்றதாகவும் 7 பேர் கைது செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது அவர்களுக்கு குற்றத்தை உறுதிப்படுத்தும் வகையில் நம்பகமான ஆவணங்கள் கிடைத்துள்ளதாக தெரிகிறது. அதன் பின்னர் சமீபத்தில் மதுரைக்கு மீண்டும் வந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் நெல்பேட்டையில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு ஆட்டோ டிரைவர் வீட்டில் பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கூறியதாவது:-
மதுரையில் கைதான 7 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர்களிடம் தீவிரவாத இயக்கத்துக்கு பணம் திரட்டியது தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுப்பப் பட்டன. இதில் சில தகவல் கிடைத்துள்ளன. இதன் அடிப்படையில் தான் மதுரை நெல்பேட்டை, வில்லாபுரம், தெப்பக்குளம் ஆகிய 3 இடங்களில் உள்ள 4 வீடுகளில் இன்று சோதனை நடத்தினோம்.
நெல்பேட்டை அப்பாசிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர் ஒரு அமைப்பில் முக்கிய நிர்வாகியாக உள்ளார். அவரிடம் கூட்டு விசாரணை நடத்திய பிறகு தான் அவர் தவறு செய்தாரா, இல்லையா? என்பது பற்றிய விவரம் தெரியவரும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மதுரையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 10 இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அப்போது தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் மதுரை மாநகரில் தங்கி இருந்து அதிரடி வேட்டை நடத்தினர். இதற்கிடையே தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசா ரணைக்காக மதுரைக்கு வந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட அமைப்புகள் மாவட்டம் முழுவதிலும் ஆட்களை திரட்டி அழைத்து வந்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளுக்கு எதிராக அந்தந்த இடங்களில் போராட்டம் நடத்தினர்.
இந்த முறை அது மாதிரி நடக்கக் கூடாது என்று தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் முடிவு செய்த னர். அதன்படி அவர்கள் நேற்று மதியம் மதுரைக்கு வந்தனர். இதனை தொடர்ந்து மாவட்டத்தின் புறநகர் பகுதியில் உள்ள ஓட்டலில் அறை எடுத்து தங்கினர்.
மதுரையில் 4 இடங்களில் அதிரடி சோதனை நடத்த வேண்டியது தொடர்பான தகவல் போலீஸ் கமிஷனரி டம் நள்ளிரவு நேரத்தில் தான் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனைத் தொடர்ந்து தெப்பக்குளம், மதிச்சியம், கீரைத்துறை ஆகிய பகுதிகளில் உள்ள போலீஸ் அதிகாரிகள் உஷார்படுத்தப்பட்டனர். மதுரை மாநகரில் தெப்பக் குளம், வில்லாபுரம், நெல்பேட்டை ஆகிய 3 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்த வந்தபோது, உள்ளூர் போலீஸ் அதிகாரிகள் மட்டுமின்றி மத்திய போலீஸ் உளவு அமைப்பு அதிகாரிகளும் சம்பவ இடத்தில் இருந்தனர்.
எனவே சம்பந்தப்பட்ட பகுதிகளில் பிரச்சினை எதுவும் நடக்கவில்லை. மதுரை மாநகரில் 4 வீடு களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி அப்பாஸ் என்பவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






