search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஓய்வூதியதாரர்கள் நலனுக்காக உயிர்வாழ் சான்றிதழ் குறித்த அரசாணையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்- ஓ.பன்னீர்செல்வம்
    X

    ஓய்வூதியதாரர்கள் நலனுக்காக உயிர்வாழ் சான்றிதழ் குறித்த அரசாணையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்- ஓ.பன்னீர்செல்வம்

    • எப்போது உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும் என்பது குறித்து ஏதும் குறிப்பிடப்படவில்லை.
    • அரசாணை ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் தங்களுடைய உயிர்வாழ் சான்றிதழை அவர்கள் எந்த மாதத்தில் ஓய்வு பெற்றார்களோ அந்த மாதத்தில் வழங்க வேண்டுமென்றும், ஒரு மாதம் சலுகைக் காலம் வழங்கப்படும் என்றும் 31.5.2023 அன்று அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

    இது விடுதலைப் போராட்ட ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின்கீழ் பயன்பெறுபவர்களுக்கும் பொருந்தும் என்றும், இதனை உரிய காலத்தில் மேற்கொள்ளவில்லை என்றால், ஓய்வூதியம் நிறுத்தப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    மேலும், இந்த அரசாணையில் ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டியவர்கள் சிறப்பு நேர்வாக ஜூலை மாதத்தில் சமர்ப்பிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அதே சமயத்தில், முந்தைய ஆண்டுகளில் ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் ஓய்வு பெற்றவர்கள் எப்போது உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும் என்பது குறித்து ஏதும் குறிப்பிடப்படவில்லை. இந்த அரசாணை ஒரு தெளிவற்றதாக இருக்கிறது. இந்த அரசாணை ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் நலனைக் கருத்தில் கொண்டு, உயிர்வாழ் சான்றிதழ் தொடர்பான 31-5-2023 நாளிட்ட நிதித் துறை அரசாணை எண். 165-ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டுமென்றும், இதுகுறித்து ஓய்வூதியதாரர்கள் சங்கத்தின் கருத்தினைக் கேட்டு அதன் அடிப்படையில் செயல்பட வேண்டும் என்றும் முதலமைச்சரை கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×