search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    புத்தேரி ஏரியில் நுரையாக வெளியேறும் தண்ணீரை வலைபோட்டு மறைத்த அதிகாரிகள்
    X

    புத்தேரி ஏரியில் நுரையாக வெளியேறும் தண்ணீரை வலைபோட்டு மறைத்த அதிகாரிகள்

    • ஏரி தண்ணீரில் அதிக அளவு ரசாயன கழிவு நீர் கலப்பதாக கூறப்படுகிறது.
    • ரசாயன கழிவு நீர் கலப்பே இதற்கு காரணம் என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

    தாம்பரம்:

    பல்லாவரம் அடுத்த துரைப்பாக்கம் 200 அடி சாலை அருகே புத்தேரி ஏரி உள்ளது. இந்த ஏரியில் இருந்து வெளியேறும் தண்ணீர் பல்லாவரம் பெரியஏரி, கீழ்கட்டளை ஏரி, நாராயணபுரம் ஏரி, பள்ளிக்கரணை சதுப்பு நிலம் பகுதிக்கு செல்லும்.

    புத்தேரி ஏரி தண்ணீரில் அதிக அளவு ரசாயன கழிவு நீர் கலப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ஏரியில் இருந்து உபரிநீர் செல்லும் பாதையில் தண்ணீர் நுரையாக வெளியேறி வருகிறது. ரசாயன கழிவு நீர் கலப்பே இதற்கு காரணம் என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

    பல்லாவரத்தை சுற்றி ஏராளமான லெதர் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இதேபோல் புத்தேரி ஏரியை சுற்றிலும் குடியிருப்புகள் அதிகம் உள்ளது. இங்கிருந்து வெளியேறும் கழிவுநீர் ஏரியில் கலந்து வருவதாக கூறப்படுகிறது.

    இதற்கிடையே உபரிநீர் வெளியேறும் கால்வாய் அருகே செல்லும் பாதை ரேடியல் சாலையை இணைக்கும் சாலையாக உள்ளது. இதனால் அவ்வழியே வாகன போக்குவரத்து அதிகம் இருக்கும். ஏரியில் இருந்து வெளியேறும் நுரை தண்ணீர் காற்றில் பறந்து வந்தது. இதையடுத்து தண்ணீர் நுரை காற்றில் பறந்து வாகன ஓட்டிகள் மற்றும் அவ்வழியே செல்லும் பொதுமக்கள் மீது விழுவதை தடுக்கும் வகையில் உபரிநீர் வெளியேறும் கால்வாய் பகுதியை வலையால் அதிகாரிகள் மூடி உள்ளனர்.

    மேலும் ஏரியின் கரை யோரத்தில் காணப்படும் ஆகாயதாமரை செடிகளையும் அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் புத்தேரி ஏரியில் தண்ணீரின் பாதிப்பை அறிய அதன் மாதிரியை மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் எடுத்து உள்ளனர். இதுகுறித்து தாம்பரம் மாநகராட்சி கமிஷனர் அழகுமீனா கூறும்போது, புத்தேரி ஏரியில் தண்ணீர் மாசு பற்றி புகார்கள் வந்து உள்ளன.

    இதுபற்றி சரியான காரணம் இன்னும் தெரியவில்லை. தற்போது இது தீவிரமான பிரச்சினையாக மாறவில்லை. எனினும் தண்ணீரின் தண்மை குறித்து அறிய மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் மாதிரிகளை சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பி உள்ளனர். அவர்கள் அளிக்கும் பரிசோதனை முடிவை வைத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    Next Story
    ×