search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மக்களை தேடி திட்டங்களை தருவது திராவிட மாடல் அரசு மட்டுமே- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
    X

    மக்களை தேடி திட்டங்களை தருவது திராவிட மாடல் அரசு மட்டுமே- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

    • மகளிர் சுய உதவி குழுவினருக்கு மட்டும் ரூ.30 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளது.
    • அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு மாவட்டச் செயலாளர் அமைச்சர் தா.மோ.அன்பரசன் வெள்ளி செங்கோல் வழங்கி கவுரவித்தார்.

    திருப்போரூர் ஒன்றியம் மானம்பதி ஊராட்சியில் குயில் குப்பம் பகுதியில் வசித்து வந்த இருளர் பழங்குடியினர் 63 பேருக்கு ரூ.7.50 கோடி மதிப்பில் மெட்ராஸ் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் மற்றும் அபிராமி ராமநாதன் டிரஸ்ட் சார்பில் புதிய வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது.

    இதற்கான திறப்பு விழா அபிராமி திரையரங்க உரிமையாளரும் மெட்ராஸ் சென்ட்ரல் ரோட்டரி சங்க தலைவருமான அபிராமி ராமநாதன் தலைமையில் நேற்று நடந்தது.

    நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு புதிய வீடுகளை திறந்து வைத்து ஒவ்வொரு வீட்டுக்கும் பிரிட்ஜ், டி.வி., பீரோ, குக்கர், மிக்சி, கிரைண்டர், அடுப்பு, பாத்திரங்கள் உள்ளிட்ட குடும்பத்துக்கு தேவையான அனைத்து பொருட்களையும் வழங்கினார்.

    அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசும் போது கூறியதாவது:-

    தமிழக அரசு ஏழை-எளிய மக்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மகளிர் சுய உதவி குழுவினருக்கு மட்டும் ரூ.30 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளது.

    மக்களை தேடி திட்டங்களை அளிப்பது திராவிட மாடல் அரசு மட்டுமே. உங்கள் குடும்பத் தலைவராகவே தமிழக முதல்வர் செயல்படுகிறார்.

    அவருக்கும் இந்த அரசுக்கும் தோளோடு தோள் நின்று ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    நான் உங்களிடம் வைக்கும் கோரிக்கை என்னவென்றால், உங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புங்கள். கல்வியை யாராலும் பறிக்க முடியாது. எந்த நிலை வந்தாலும் கல்வியை விட்டு விடாதீர்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சி முடிந்ததும் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் திருப்போரூர் வடக்கு, தெற்கு ஒன்றியங்களில் கொடியேற்று விழா நிகழ்ச்சிகள் பிரமாண்டமாக நடைபெற்றது.

    மாவட்டச் செயலாளர் தா.மோ.அன்பரசன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த கொடியேற்று விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு கிராமம் கிராமமாக சென்று கொடியேற்றினார்.

    திருப்போரூர் பேரூர் அரசு மருத்துவமனை எதிரில் இருந்து கொடியேற்றி இள்ளலூர், வெண்பேடு, காயார், பனங்காட்டுப்பாக்கம், கொளத்தூர், வெள்சிசை கோளம்பாக்கம், தையூர் என 13 இடங்களில் பிரசார வேனில் கிராமம் கிராமமாக சென்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியேற்றினார். கல்வெட்டையும் திறந்து வைத்தார்.

    அவருக்கு வழி நெடுக மக்கள் திரண்டு நின்று பிரமாண்ட வரவேற்பு அளித்தனர். பல ஊர்களில் மலர் தூவி வரவேற்பு கொடுத்தனர்.

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு மாவட்டச் செயலாளர் அமைச்சர் தா.மோ.அன்பரசன் வெள்ளி செங்கோல் வழங்கி கவுரவித்தார்.

    நிகழ்ச்சியில் பல்லாவரம் இ.கருணாநிதி எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ., ஒன்றியச் செயலாளர் எஸ்.ஆர்.எல்.இதயவர்மன், படப்பை மனோகரன் இளைஞரணி அமைப்பாளர் கோல்டு பிரகாஷ் மற்றும் கழக நிர்வாகிகள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் திரளாக கலந்து கொண்டனர்.

    Next Story
    ×