என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பு அதிகரிப்பு
- 2 அணைகளில் இருந்தும் மொத்தம் 23 ஆயிரத்து 912 கன அடி உபரி நீர் தமிழகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறது.
- கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் ஒகேனக்கல் வழியாக நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது.
சேலம்:
கர்நாடக மாநிலம் மைசூர், குடகு மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக அங்குள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பீச்சனஹள்ளியில் அமைந்து உள்ள கபினி அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 84 அடியாகும். இந்த அணைக்கு நேற்றைய நிலவரப்படி நீர்வரத்து விநாடிக்கு 14 ஆயிரத்து 697 கன அடியாக இருந்தது.
இந்த நிலையில் இன்று மேலும் நீர்வரத்து அதிகரித்து விநாடிக்கு 22 ஆயிரத்து 840 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. தற்போது 82.36 அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அணையில் நீர் முழு கொள்ளளவை எட்டும் நிலையில் கடந்த 13-ந்தேதி மாலையில் விநாடிக்கு 20 ஆயிரம் கன அடி தண்ணீர் கபிலா ஆற்றில் திறந்து விடப்பட்டது. தொடர்ந்து இன்று காலை முதல் 20 ஆயிரம் கன அடியில் இருந்து 23 ஆயிரத்து 333 கன அடியாக அதிகரித்து அணையில் இருந்து தண்ணீர் கபிலா ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் நேரடியாக காவிரி ஆற்றில் சங்கமிக்கிறது.
இதேபோல் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி அருகே காவிரி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள கே.ஆர்.எஸ் அணை நிரம்பி வருகிறது. இந்த அணையின் மொத்த கொள்ளளவு 124.80 அடி ஆகும். அணைக்கு நீர்வரத்து 25 ஆயிரத்து 933 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் தற்போதைய நீர்மட்டம் 107.60 அடியாக உள்ளதால் அந்த அணையின் பாதுகாப்பு கருதி விநாடிக்கு 579 கன அடி நீர் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இந்த 2 அணைகளில் இருந்தும் மொத்தம் 23 ஆயிரத்து 912 கன அடி உபரி நீர் தமிழகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு காவிரி ஆற்றில் திறக்கப்பட்ட உபரிநீர் நேற்று மாலை 5 மணி அளவில் தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுவை வந்தடைந்தது. இதனால் நேற்று மாலை 4,500 கன அடியில் இருந்து 10 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. பின்னர் இரவு 7 மணி அளவில் 15 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இந்த நீர்வரத்தை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
இதனால் ஒகேனக்கல் ஐந்தருவி, பெரியபாணி, மெயின் அருவி, சினி அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. நீர்வரத்து மேலும் அதிகரிக்க கூடும் என்பதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இன்று முதல் பரிசல் இயக்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை இந்த தடை உத்தரவு தொடரும் என தருமபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளார்.
மேலும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்வதால் அணைகளில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறந்து விடும் நேரத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் காவிரி ஆற்றின் கரையோரம் உள்ள பொதுமக்கள் இரவு நேரங்களில் கரையை கடப்பதை தவிர்க்க வேண்டும் எனவும், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் வருவாய்த்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் ஒகேனக்கல் வழியாக நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது. நேற்று முன்தினம் விநாடிக்கு 4,013 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று 4,047 கன அடியாக அதிகரித்தது. மேலும் இன்று காலையில் நீர்வரத்து அதிகரித்து 5054 கன அடி தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 1,000 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்படுகிறது.
அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவை விட நீர்வரத்து அதிகமாக உள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 8 மணி அளவில் 43.83 அடியாக உயர்ந்தது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் மளமளவென உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பாசன பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் காவிரி ஆற்றில் 23ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்