search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சந்திர கிரகணம் முடிந்த பின்னர் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் பரிகார பூஜை
    X

    சந்திர கிரகணம் முடிந்த பின்னர் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் பரிகார பூஜை

    • மாத கிருத்திகை உள்ளிட்ட விசேஷ நாட்களில் மட்டும் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.
    • விடுமுறை தினம் என்பதால் ஏராளமான பக்தர்கள் பழனிக்கு வந்திருந்தனர்.

    பழனி:

    அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். தினமும் காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு 6 கால பூஜைகள் நடக்கிறது. மாத கிருத்திகை உள்ளிட்ட விசேஷ நாட்களில் மட்டும் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.

    மேலும் சூரிய கிரகணம், சந்திர கிரகணம் நிகழும் நாட்களின்போது பழனி முருகன் கோவில் மற்றும் அதன் உபகோவில்களில் பூஜை நேரம் மாற்றப்படுவது வழக்கம்.

    அதன்படி இன்று அதிகாலை 1.05 மணிக்கு தொடங்கிய சந்திர கிரகணம் 2.23 மணி வரை நீடித்தது. இதையொட்டி பழனி முருகன் கோவில் உள்பட அனைத்து உபகோவில்களிலும் நேற்று இரவு 8 மணிக்கு அர்த்தஜாம பூஜை செய்து நடை சாத்தப்பட்டது. சந்திரகிரகணம் முடிந்ததும் அனைத்து கோவில்களிலும் சுத்தம் செய்யப்பட்டு பரிகார பூஜை நடைபெற்றது. அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு கலசபூஜை, கலச அபிஷேகம், நைவேத்தியம், தீபாராதனை மற்றும் நித்ய பூஜைகள் நடைபெற்றது. இன்று விடுமுறை தினம் என்பதால் ஏராளமான பக்தர்கள் பழனிக்கு வந்திருந்தனர். இதனால் அடிவாரம் ரோப்கார் நிலையம், மின்இழுவை ரெயில்நிலையம், கிரிவீதி, யானைப்பாதை, படிப்பாதைகளில் ஏராளமான பக்தர்கள் கூட்டம் தென்பட்டது.

    மேலும் மலைக்கோவிலில் நீண்ட நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    இதே போல் திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் நேற்று மாலை 6.45 மணிக்கு நடை சாத்தப்பட்டது. சந்திர கிரகணம் முடிந்த பின்னர் பரிகார பூஜை செய்யப்பட்டு மீண்டும் நடை திறக்கப்பட்டது. இதேபோல் அபிராமி அம்மன் கோவில், தேனி மாவட்டத்தில் உள்ள கோவில்களும் பரிகார பூஜைக்குப் பின்னர் மீண்டும் நடை திறக்கப்பட்டது.

    Next Story
    ×