search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அரசு பஸ்களில் முன்பதிவு செய்த பயணிகள் கடும் குழப்பம்: எங்கு சென்று பஸ் ஏறுவது என்பது தெரியாமல் திணறல்
    X

    அரசு பஸ்களில் முன்பதிவு செய்த பயணிகள் கடும் குழப்பம்: எங்கு சென்று பஸ் ஏறுவது என்பது தெரியாமல் திணறல்

    • கடைசி நேரத்தில் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பை பயணிகள் கவனிக்காததால் அரசு விரைவு பஸ்களில் முன்பதிவு செய்த பயணிகள் பஸ் ஏறுவதில் கடும் குழப்பம் ஏற்பட்டது.
    • கடைசி நேரத்தில் கிளாம்பாக்கம் செல்ல முடியாமலும் என்ன செய்வது என்று தெரியாமலும் பல பயணிகள் இன்று முன்பதிவு செய்த பஸ்களை தவறவிட்டனர்.

    சென்னை:

    பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 3 நாட்களே இருக்கும் நிலையில் சென்னையில் பணி நிமித்தமாக தங்கி இருப்பவர்கள், கல்லூரி மாணவர்கள், பொது மக்கள் என பல்வேறு தரப்பினரும் பொங்கல் பண்டிகையை கொண்டாட தங்களது சொந்த ஊர்களுக்கு செல்கிறார்கள். அவர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இன்று முதல் 3 நாட்களுக்கு இயக்கப்படுகின்றன.

    சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கக்கூடிய 2,100 பஸ்களுடன் கூடுதலாக 4,706 சிறப்பு பஸ்கள் என 3 நாட்களுக்கு மொத்தம் 11,006 பஸ்களும், திருச்சி, கோவை உள்ளிட்ட பிற நகரங்களில் இருந்து 8,478 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளன. இதன் மூலம், பொங்கல் பண்டிகைக்காக 3 நாட்களுக்கு சென்னை மற்றும் பிற நகரங்களில் இருந்து மொத்தம் 19,484 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்ல கோயம்பேடு, கிளாம்பாக்கம், பூந்தமல்லி, மாதவரம், தாம்பரம் சானடோரியம், கே.கே.நகர் ஆகிய 6 இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. கிழக்கு கடற்கரை சாலை வழியாக கும்பகோணம், வேளாங்கண்ணி, நாகப்பட்டினம், திருநள்ளாறு, புதுச்சேரி, திருத்துறைப்பூண்டி வேதாரண்யம், தூத்துக்குடி ஆகிய பகுதிகளுக்கு செல்லும் அரசு விரைவு பஸ்கள் (எஸ்.இ.டி.சி) கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது. மேலும் கோயம்பேடு பஸ் நிலைய வளாகத்தில் எந்தெந்த இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது என்கிற விவரங்கள் அடங்கிய பதாகைகள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளது.


    அதேபோல் திருச்சி, சேலம், ஈரோடு, தர்மபுரி, கோவை, திருப்பூர், வேலூர், திருவண்ணாமலை, ஓசூர், கடலூர், செஞ்சி, வந்தவாசி, சிதம்பரம் உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் அரசு போக்குவரத்துக் கழக (டி.என்.எஸ்.டி.சி) பஸ்கள் அனைத்தும் வழக்கம் போல கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது.

    மேலும் அரசு விரைவு பஸ்களில் முன்பதிவு செய்த பயணிகள் கிளாம்பாக்கம் பஸ்நிலையத்துக்கு வந்து பஸ் ஏற வேண்டும் என்றும், முன்பதிவு செய்யாத பயணிகள் கோயம்பேடு பஸ்நிலையத்துக்கு சென்று பஸ் ஏறலாம் என்றும் அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் நேற்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. கடைசி நேரத்தில் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பை பயணிகள் கவனிக்காததால் அரசு விரைவு பஸ்களில் முன்பதிவு செய்த பயணிகள் பஸ் ஏறுவதில் இன்று கடும் குழப்பம் ஏற்பட்டது. அவர்கள் எங்கு சென்று பஸ் ஏறுவது என்பது தெரியாமல் திணறுகிறார்கள்.

    முன்பதிவு செய்த பயணிகளில் சுமார் 30 சதவீதம் பேர் இன்று கிளாம்பாக்கத்துக்கு செல்லாமல் கோயம்பேட்டில் பஸ் ஏறுவதற்காக வந்தனர். ஆனால் அவர்கள் முன்பதிவு செய்த பஸ்கள் அங்கு இல்லாததால் ஏமாற்றம் அடைந்தனர். இது தொடர்பாக விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட உதவி மையங்களில் ஊழியர்கள் இல்லாததால் பஸ் ஏற வந்த பயணிகள் யாரிடம் சென்று விசாரிப்பது என்பது தெரியாமல் திணறினார்கள். பின்னர் அவர்கள் அங்கிருந்த மற்ற கோட்டங்களின் பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களிடம் விசாரித்த போது அவர்கள் முன்பதிவு செய்த பயணிகள் கிளாம்பாக்கத்துக்கு செல்ல வேண்டும் என்று கூறினார்கள்.

    கடைசி நேரத்தில் கிளாம்பாக்கம் செல்ல முடியாமலும் என்ன செய்வது என்று தெரியாமலும் பல பயணிகள் இன்று முன்பதிவு செய்த பஸ்களை தவறவிட்டனர். மேலும் முன்பதிவு செய்த பயணிகள் பலருக்கு கிளாம்பாக்கத்தில் புதிய பஸ் நிலையம் செயல்படுவது பற்றிய விவரம் தெரியவில்லை. அவர்கள் கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு வந்து திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

    கோயம்பேடு வருபவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையம் சென்றடைய முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால் பயணிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.


    இது ஒருபுறம் இருக்க அரசு விரைவு பஸ் கண்டக்டர்கள் மற்றும் டிரைவர்கள் அனைவரும் ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக முன்பதிவு செய்த பயணிகளை போனில் தொடர்பு கொண்டு பஸ் புறப்படும் இடம் குறித்து அவர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்துக்கு பயணிகள் வருவதற்கு சிறிது நேரம் தாமதமானாலும் காத்திருந்து அவர்களை ஏற்றி செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தனர்.

    அதன்படி முன்பதிவு செய்த பயணிகளிடம் பஸ் புறப்படுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் போனில் தொடர்பு கொண்டு பேசினார்கள். கிளாம்பாக்கத்துக்கு வந்து பஸ் ஏறுமாறு தெரிவித்தனர். அப்போது பல பயணிகள் தாங்கள் கோயம்பேடு பஸ் நிலையத்தில் காத்திருப்பதாக பதில் அளித்துள்ளனர். இதனால் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனே அவர்களை கிளாம்பாக்கம் பஸ் நிலையத்துக்கு புறப்பட்டு வருமாறு கூறியுள்ளனர். அந்தவகையில் ஏராளமான பயணிகள் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்துக்கு தாமதமாக வந்தனர். அப்படி தாமதமாக வந்த பயணிகளை ஏற்றி செல்வதற்காக அதிகபட்சமாக சுமார் அரை மணி நேரம் வரை பஸ்கள் காத்திருந்தன. அதற்கு மேல் வராத முன்பதிவு செய்த பயணிகளை விட்டுவிட்டு அரசு விரைவு பஸ்கள் புறப்பட்டு சென்றன. பஸ்களை தவறவிட்ட பயணிகளுக்கு முன்பதிவு செய்த டிக்கெட் கட்டணம் திருப்பி கொடுக்கப் பட்டது. ஆனால் அவர்கள் அதன்பிறகு சொந்த ஊருக்கு செல்ல பஸ் கிடைக்காமல் தவித்தனர்.

    Next Story
    ×