என் மலர்
தமிழ்நாடு
பா.ஜ.க.-எடப்பாடி பழனிச்சாமியை பாராளுமன்ற தேர்தலில் மக்கள் நிராகரிப்பார்கள்- முத்தரசன்
- பிரதமரின் உத்தரவாதத்தை விட உபத்திரவாதம் தான் அதிகமாக உள்ளது.
- பா.ம.க. கூட்டணி குறித்து மாறி மாறி பேசி தற்போது பா.ஜ.க.வில் இணைந்து உள்ளனர்.
காரைக்குடி:
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களிடம் கூறியதாவது:-
கடந்த 10 ஆண்டுகளாக பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. ஆனால் பிரதமர் மோடி கொடுத்த வாக்குறுதிகளை எதையும் நிறைவேற்றவில்லை. தற்போது தேர்தலில் மோடி உத்தரவாதம் என்று பா.ஜ.க.வினர் பிரசாரம் செய்து வருகின்றனர். பிரதமரின் உத்தரவாதத்தை விட உபத்திரவாதம் தான் அதிகமாக உள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி மொத்தம் 39 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தற்போதும் இந்த கூட்டணி வெற்றி பெறும். 10 ஆண்டுகளாக தி.மு.க. கூட்டணி செயலாற்றி வருகிறது. தொகுதி பங்கீட்டில் எங்களுக்குள் எந்த வித முரண்பாடும் இல்லை. தமிழகத்தில் பா.ஜ.க. தலைமையில் உருவாகியிருக்கிற கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி ஆகும். பா.ம.க. கூட்டணி குறித்து மாறி மாறி பேசி தற்போது பா.ஜ.க.வில் இணைந்து உள்ளனர். இந்த கூட்டணியை தமிழக மக்கள் நிராகரிப்பார்கள்.
கடந்த காலங்களில் மக்களுக்கு எதிரான சட்டங்களை பாராளுமன்றத்தில் நிறைவேற்றியபோது அதனை ஆதரித்தவர் எடப்பாடி பழனிச்சாமி. அவரையும் மக்கள் நிராகரிப்பார்கள்.
பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவத்தில் தமிழர்களை தொடர்புபடுத்தி பேசியதற்கு பா.ஜ.க. மத்திய இணை அமைச்சர் ஷோபாவுக்கும் கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.